திருமயம்

1826

புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் வழியில் 1200 ஆண்டுகால தொன்மைப் புகழ்மிக்க திருமயம்…

இன்றும் தமிழரின் புகழை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அழகிய கோட்டைதான் திருமயம் கோட்டை. திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது.


நூற்றாண்டுகள் பல கடந்தும் அழியாத கலைச் சின்னமாய், இன்றும் புதியனவாகத் திகழ்பவைகளில் ஒன்று திருமயம் கோட்டை.
அதுவும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் உருவாக்கி வைக்கப்பட்ட பல குடைவரைக் கோவில்கள் சரித்திரச் சின்னங்கள் ஒருங்கே அமையப்பெற்ற ஊராக அன்றும், இன்றும் திகழ்ந்து வருகிறது “திருமயம்’.

“திருமெய்யம்’ காலத்தால் மருவி, திருமயம் என்ற பெயராகி நம்மால் அழைக்கப்படுகிறது. திருமெய்யம் என்றால் “உண்மையின் இருப்பிடம். வடமொழியில் இவ்வூர்
“சத்திய ஷேத்திரம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
கி.பி.16-17ஆம் நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆளுகையின் கீழ் இப்பகுதி வந்தது. அந்த வேளையில், இராமநாதபுர சமஸ்தானத்தின் வடக்கு எல்லைப் பகுதியாக திருமயம் விளங்கியது.

சேதுபதிகளின் மேலாண்மைக்கு உட்பட்டு பல்லவராயர்கள் எனும் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தனர்.
கி.பி.1673-1708-இல் இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்கிற விஜய இரகுநாதத் தேவர் 40 ஏக்கர் சுற்றளவில் ஏழுச் சுற்று மதில்களுடன் கருங்கற்களால் பிரமாண்டமான கோட்டை ஒன்றை இங்கே கட்டி வைத்தார். பின்னர் சேதுபதி மன்னருக்கும், புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையினருக்கும் திருமண உறவுகள் ஏற்பட்ட காரணத்தால், பல்லவராயர்களின் கையிலிருந்த திருமயம் பகுதி அரசுரிமை தொண்டைமான் மன்னர்களின் ஆளுகைக்கு மாறிப் போனது.
ஏழு வட்டவடிவிலான மதில் சுவர்கள் ஒன்றுக்குள் ஒன்றாகக் கொண்டு பிரமாண்ட முறையில் கட்டப்பட்டிருந்த இக்கோட்டையில் தற்போது நான்கு மதில் சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. கோட்டையின் அமைப்பு வட்ட வடிவமானதாகும். இவ்விதமாக அமைந்த கோட்டையை “பத்மகக் கோட்டை’ என்று அழைக்கப்படும். வெளிச்சுவரைச் சுற்றி ஆழமான அகழி உண்டு.
இன்றும் கோட்டையின் வடக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆகிய மூன்று திசைகளிலும் கம்பீரமான நுழைவு வாசல்கள் உள்ளன.

வடக்கு வாசல் காவல் தெய்வமாக பைரவரும், தெற்கு வாசலில் அனுமன், சக்தி, கணபதி ஆகியோரும். தென்கிழக்கில் முனீஸ்வரரும் காவல் தெய்வமாகக் காத்து நிற்கின்றனர். அந்தக் காலத்தில் ஒரு கம்பீரமிக்க கோட்டையின் கட்டுக்காவல் தாண்டி உள்ளே நுழைகிற உணர்வே இதைக் காணுகையில் நமக்கும் ஏற்படுகிறது.
காரணம், அன்றையக் காலகட்டத்தில் எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க எத்தகைய பாதுகாப்பு அம்சங்களோடு கோட்டை கொத்தளங்கள் விளங்கியிருந்தன என்பதை இன்றும் நாம் கண்கூடாகக் காண்பதற்கு திருமயம் கோட்டை ஓர் அற்புதமான வரலாற்று ஆவணமாக நம் முன்னே
நிற்கிறது.
அதைச் சுற்றிலும் மதில்கள் எழுப்பப்பட்டுள்ளன. உள்கோட்டையின் கருங்கல் மதிலைச் சுற்றி மேல்பகுதியில் கட்டப்பட்டுள்ள செங்கற்களால் ஆன கைப்பிடிச் சுவற்றில் ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கும், ஆட்கள் மறைந்து கொள்ளவும் இடைவெளிகள் காணப்படுகின்றன. உள் கோட்டைக்கு மேலே செல்லும்போது 100 டன் எடை அளவு இருக்கும் ஒரு தனிக்கல்லில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இக்குன்றில் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் வரைந்த மூலிகை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதன் தெற்குப் பகுதியில், கருங்கற்களால் கட்டப்பட்ட பெரிய அறை ஒன்று உள்ளது. அது போர்த்தளவாடங்கள் வைக்கும் பாதுகாப்பு அறையாக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க திருமயம் கோட்டை ராமநாதபுரம் சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் காலத்தில் 1676-ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. வட்ட வடிவமான இக்கோட்டையைச் சுற்றி ஏழு சுற்று மதில்கள் இருந்துள்ளன. ஆனால், தற்போது மூன்று சுற்று மதில்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.


இதன் எதிரே, குன்றின் மேற்குச் சரிவில் 20 அடி உயரத்தில் அந்தரத்தில் மிக உன்னதமான கலை நேர்த்தியில் குடைவரைக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக் குடைவரைக் கோவிலும், தெற்குச் சரிவில் அமைந்துள்ள சிவன், விஷ்ணு குடைவரைக் கோவில்களும் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
கோட்டையின் மேல் 20 அடி உயரமுள்ள பிரத்யேக கருங்கல் மேடையில் பீரங்கி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஆறு பீரங்கிகள் இக் கோட்டையின் வடக்கு, தெற்கு, கிழக்கு நுழைவாயில்களில் வைக்கப்பட்டுள்ளன. இதற்குத் தென்புலம் மழை நீரைத் தேக்கி வைக்கக்கூடிய மாதிரி சிறு குட்டை ஒன்றை அமைத்துள்ளனர். இங்கே தங்கியிருக்கும் காலங்களில் குடிநீராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பெரிய குட்டை கோட்டையின் வடபுறம் உள்ளது. இவற்றால், மாதக்கணக்கில் இதன் உள்ளே இருப்பவர்கள் குடிநீருக்காக வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.
கி.பி. 1708-இல் கிழவன் சேதுபதி காலத்திற்குப் பின், சேதுபதி தாண்டத்தேவன் என்பவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கிழவன் சேதுபதியின் மகன் பவானிசாகர் என்பவருக்கும் தாண்டத்தேவனுக்கும் இடையே அரசுரிமை யாருக்கு என்பதில் போர் ஏற்பட்டது.
இந்த அரசுரிமைப் போரில் புதுக்கோட்டைத் தொண்டைமான் மன்னர் இரகுநாதராயத் தொண்டைமானின் உதவியால் தாண்டத்தேவன் வெற்றிபெற முடிந்தது. இந்த வெற்றிக்கு நன்றி காணிக்கையாக தாண்டத் தேவன் திருமயம் கோட்டையை தொண்டைமான் மன்னருக்கு சன்மானமாக வழங்கினார். எனவே, கி.பி. 1723-ஆம் ஆண்டுமுதல் திருமயம் கோட்டை தொண்டைமான் மன்னர்களின் பொறுப்பில் வந்தது.கி.பி.1800-ஆம் ஆண்டு வாக்கில், புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேயருடன் சுமுக உறவு வைத்திருந்த காரணத்தால் திருமயம் கோட்டையை ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியிருந்தார்.


கி.பி. 1875-ஆம் ஆண்டிலிருந்து கொடிய குற்றம் புரிந்தவர்களை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாக இக்கோட்டை திகழ்ந்தது.
இக்குன்றின் தெற்குச் சரிவில் அதி அற்புதமான கலைக் கோவிலாக “சத்தியகிரீஸ்வரம்’ எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு குடைவரைக் கோவில்.
இந்தக் கோவில்களுக்கு சற்று உயரே வேணுவனேஸ்வரி அம்மன் சந்நிதி உள்ளது. இதனையடுத்து கிழக்கு பார்த்தவண்ணம் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோவில் உள்ளது. மூலவராக ஆவுடையார் கோலத்தில் லிங்கத் திருமேனி அமைந்துள்ளது.
மண்டபத்தின் சுவர்களிலும், மேல் விதானத்திலும் பழங்கால மூலிகை ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன. கிழக்குச் சுவரில் புதுமையான ஆளுயர லிங்கோத்பவர் புடைப்புச் சிற்பமாக
அமைந்துள்ளது.

சிவன் கோவிலுக்குக் கிழக்குப் பக்கமாய் சத்தியமூர்த்தி வைணவக் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீரெங்கநாதர் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கம் திருத்தலத்தைவிட இத் திருத்தலம் காலத்தால் முந்தியது.
தென்பாண்டி மண்டலத்தின் 18 பதிகளில் இதுவும் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.
குகைக் கோவிலில் விஷ்ணுப் பெருமான் “”திருமெய்யர்” என்கிற நாமத்தில் அனந்த சயன மூர்த்தியாகக் கண்கொள்ளா அற்புதப் பேரழகாகக் காட்சியளிக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குகைக் கோவில்களில் இதுவே அளவில் பெரியது. அனந்த சயன மூர்த்தி மலையோடு சேர்த்து பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார்.
அனந்த சயன மூர்த்திக்குப் பின்னால் உள்ள சுவரில் மேடையில் நடத்தப்படும் ஒரு நாடகக் காட்சியினை உயிரோட்டமாய் கல்லிலே வடித்திருக்கிற இந்தச் சிற்ப வேலைப்பாடு வேறெங்கும் காண முடியாத ஒன்று. இந்தக் குடைவரைக் கோவிலை அடுத்து சத்தியமூர்த்தி, விஸ்வக்சேனர், இராமர் ஆகியோரின் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.

இங்கு ஒற்றைக் கல்லால் ஆன பாறையும் உள்ளது.

மலைக்கோட்டை அமைப்பு : திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. எனினும் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போய்க் காணப்படுகின்றன. பாதுகாப்பு அரணாக அமைந்த வெளிச்சுற்று மதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதிகள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. ஏழு சுற்று மதில்கள் இருந்ததாக இங்கே காணப்படும் தொல்லியல் வரலாற்று அறிவிப்பு பலகைகள் சொல்கின்றன. திருமயம் மலைக்கோட்டைக்கு மூன்று நுழைவாயிகள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ளன.

மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும் அமைந்துள்ள திருமயம் மலைக்கோட்டையின் உள்கோட்டையைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்தச் சுற்று மதில்கள் கட்டுக் கோப்பாகத் திகழ்கின்றன.

உள்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன. மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது. இது போல கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன. இவற்றைத் தவிர மலைக் கோட்டையில் வேறு பாதுகாக்கப்பட்ட கட்டடங்கள் ஏதுமில்லை. எனினும் இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப் போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படிக்கட்டுகளில் மெதுவாக ஏறிப் போனால் உச்சியில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பீரங்கியைப் பார்க்கலாம். அங்கிருந்து மொத்த ஊரையும் ஏரியல் வியூவில் நாம் கண்டு ரசிக்கலாம்.

இக்கோவிலின் கிழக்குப் பக்கம் முற்றிலும் புதிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ள எண்கோண வடிவ தெப்பக்குளம் நம் கவனத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

இவ்வாறு 1200 ஆண்டுகள் தொன்மைப் புகழ் மிக்க ஊராக திருமயம் சீரோடும், சிறப்போடும் இன்று விளங்கி வருகிறது. சரித்திரம் சொல்லும் இங்குள்ள கலைப் படைப்புகள் தமிழினத்தின் நாகரிக வாழ்வை விளக்கி நிற்கும் ஆவணங்கள் என்றால் அது மிகையாகாது.

அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோவில் திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்

சுவாமி : உமா மகேஸ்வரர்.

அம்பாள் : ராஜராஜேஸ்வரி.

தீர்த்தம் : சத்திய புஷ்கரணி.

தலவிருட்சம் : மூங்கில் மரம்.

தலச்சிறப்பு : சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இக்கோவில் ஒரே மலையில்  குடைந்து சிவனும், பெருமாள் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு : இது கி.பி. 7-ம் நூற்றாண்டு சுமார் 1300 வருடங்களுக்கு முன் பல்லவர்கள்  காலத்தில் கட்டப்பட்ட கோவில்.  மகேந்திரவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது.  இக்கோவில்  மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரைக்கோயில்.  ஸ்தல விருட்சம்: மூங்கில், இதனால்  இப்பகுதி வேணுவனம் என அழைக்கபடுகிறது.  அம்பாள் பெயர் வேணுவனேஸ்வரி ஆகும்.   சத்யபுஷ்கரணி எனும் தீர்தத குளம் உள்ளது.  சந்திரன் பூஜை பண்ணியதால் சந்திரபுஷ்கரணி  என்றும் கூறப்படுகிறது அதற்கான சிற்பம் உள்ளது. இக்கோவில் இரண்டு சிவன் இரண்டு அம்பாள்  உள்ளது.  அவை மலைக்குள் குடைந்து சுந்தரபாண்டியன் காலத்தில் அமைக்கப்பட்டது.  மகேந்திர  வர்ம பல்லவர், நரசிம்ம வர்ம பல்லவர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது என சில கல்வெட்டுகள்  கண்டெடுக்கப்பட்டது.  இந்திய தொல்லியல் ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்து சமய  அறநிலைய துறை நிர்வாகத்து கீழும் உள்ளது.

கோவிலின் கட்டடக்கலை : மகேந்திர வர்ம பல்லவர், நரசிம்ம வர்ம பல்லவர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது என சில கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது.  இது கி.பி. 7-ம் நூற்றாண்டு சுமார்  1300 வருடங்களுக்கு முன் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்.  மகேந்திரவர்மன் என்ற  மன்னனால் கட்டப்பட்டது.

1000 ஆம் ஆண்டு பழமை வாய்ந்த திருமயம் மலைகோட்டையில் உள்ள குடைவரை சிவன்

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

பூஜை விவரம் :சித்தரை மாதம் 10 பௌர்ணமி நாட்கள் பிரம்மோட்சவம், ஆடி மாதம் 10 நாட்கள் திருவிழா ஆடிப்பூரம் விசேசம்,பிரதோஷம்,சிவராத்திரி,கிரிவலம் விசேசமாக நடக்கும்.

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோவில் திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்

சுவாமி : சத்தியமூர்த்தி.

அம்பாள் : உஜ்ஜிவனதாயார்.

தலச்சிறப்பு : பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.  இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். “உலகத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாள்” இங்கு தான் வீற்றிருக்கிறார். திருமுகத்தை ஒரு சாளரம் வழியாகவும், திருப்பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான, ஒரே கல்லால், பாறையைக் குடைந்து உருவாக்கி உள்ளனர். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.  பல்லவர் காலத்தில்  சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் சிவன் கோவிலும்  பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.  இந்த சத்திய மூர்த்தி பெருமாள் ஆலயத்தை தனியே சுற்றி  வரமுடியாது.  மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது சிறப்பு.

தல வரலாறு : மது, கைடபர் என்னும் அரக்கர்கள் பெருமாள் பாம்பணையில் படுத்து  உறங்கிக்  கொண்டு இருக்கும் போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர்.  அதை கண்டு  அஞ்சிய ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும், பூதேவி பெருமாளின் திருவடி அருகிலும்  ஒளிந்து  கொண்டனர்.  அப்போது பெருமாளின் உறக்கம் கலையக்கூடாது என்று ஐந்து தலை நாகம்  ஆதிஷேசன் தன் வாயிலிருந்து நஞ்சை கக்கி அரக்கர்களை விரட்டிவிடுகிறது.  பெருமாளின்  அனுமதி இல்லாமல் இப்படி செய்து விட்டோமே என்று நாகம் அஞ்சி இருக்கும் நேரத்தில் பெருமாள்  என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய் பாராட்டுக்குரிய செயல் என்று  கூறியதாக வரலாறு.  இதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தலத்தில் ஆதிசேஷன் தன் தலையை  அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.

பாடியோர் : திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் பாடிய ஸ்தலம்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

திருவிழாக்கள் : வைகாசி பௌர்ணமி தேர் – 10 நாட்கள் விழா,ஆடிபூர திருவிழா – 10 நாட்கள் திருவிழா,கிருஷ்ணஜெயந்தி,வைகுண்ட ஏகாதேசி.

திருமயம் கோட்டை பைரவர்

மறவன் கோட்டை எனப்படும் கோட்டையும் கோட்டை உள்ளேயும் வெளியேயும் வாழும் சகல ஜீவராசிகளும் உய்யும் வண்ணம் கோட்டையின்  கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார்.  இந்தக் கோட்டையை இவர்  பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி தனி கோவில்  கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே ஆகும்.  அவர் தம் கண்ணுக்கு முன்னால் பரந்து  விரிந்து காணப்படுகின்றது பாம்பாறு.  பாம்பு போல வளைந்து, நெளிந்து காணப்படுவதால் இப்பெயர்  ஏற்பட்டுள்ளது.  கோவிலின் முன்புறச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரும்  கண்கண்ட தெய்வமாக ஸ்ரீ பைரவர் விளங்குகிறார். சகல தோஷ பரிகார தளமாகவும் இது  விளங்குகிறது. விசாகம் நச்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய சிறப்பு தலம் ஆகும்..

தல வரலாறு : புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்னும் இத்தலத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ  கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவர். சிவபெருமான் பைரவ வடிவம் கொண்டதாக  ஆகமங்கள் இயம்புகின்ற இக்கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும்.  ராமநாதபுரச் சீமையை ஆண்டகிழவன் சேதுபதி அவர்களால் இக்கோட்டையானது கட்டப்பட்ட  போது கோட்டையின் தென்புற பிரதான வாயிலில் ஸ்ரீசக்தி விநாயகரும் ஸ்ரீ ஆஞ்சநேயர்  சன்னதிகளும், கோட்டையின் வடபுற சுவற்றில் ஸ்ரீ கோட்டை பைரவர் கோவில்  அமைக்கப்பட்டது.  இக்கோவில் மத்திய தொல்லியல் ஆய்வித்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.  புதுக்கோட்டை திருக்கோவில்கள் நிர்வாக அதிகாரி அவர்களாலும் உதவி ஆணையர் அவர்களாலும்  நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

பரிகாரம் செய்யும் வழிமுறைகள் : அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவரைக்கு அபிஷேகம், வடமாலை, சந்தனகாப்பு செய்து நெய்தீபம்,  மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகும் மற்றும் பிதூர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எழுமிச்சம் பழமாலை சூட்டி எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதூர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு  பூசி நெய்தீபம் ஏற்றி வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.

இப்பைரவருக்கு சந்தனாதித் தைலம் சாற்றி அபிஷேகம், செய்து சந்தனகாப்பு வடமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம் தொழில் அபிவிருத்தி ஏற்படும்.  செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளிமாலை நெய்தீபம் ஏற்றி ஏழுவாரம் தொடர்ந்து செய்து வந்தால் சகோதர ஒற்றுமை  ஏற்படும். எல்லா பரிகாரங்களும் நெயதீபமும், மிளகு தீபமும் பொதுவானது, தேய்பிறை அஷ்டமி  அன்று வழிபட்டால் நன்மை கோடி வந்து சேரும்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

பூஜை விவரம் : கார்த்திகை மாதம் நடைபெறும் ஸ்ரீ பைரவாஷ்டமி விழா இங்கு சிறப்பு பெற்றதாகும்


குறிப்பு;தீரர் சத்திய மூர்த்தி பிறந்த ஊர்.புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ளது.வரலாற்றுச் சின்னமாக இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் பாதுகாக்கப்படும் இக்கோட்டை திறந்திருக்கும் நேரம்: காலை 08.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
நுழைவுக் கட்டணம்: இந்தியர்கள்: 5/- ரூபாய்; வெளிநாட்டவர் 100/- ரூபாய். புகைப்படம் எடுக்க: 25/- ரூபாய்; வீடியோ எடுக்க 100/- ரூபாய்.