இலங்கை சிறையில் விடுவிக்கப்பட்ட தமிழகத்தின் 32 மீனவர்கள் விமானத்தில் சென்னை வந்தனர் – வரவேற்பளித்த அதிகாரிகள்

490

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழகத்தின் நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் நேற்று மாலை விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்று, அவர்களின் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகைள சேர்ந்த 32 மீனவர்கள், கடந்த மாதம் 1ம் தேதி அதிகாலை நடுக்கடலில் விசைப் படகுகள் மூலமாக மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,

தமிழக மீனவர்களின் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி, தமிழகத்தை சேர்ந்த 32 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களின் விசைப் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் கூடைகளில் இருந்த ஏராளமான மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் தமிழகத்தை சேர்ந்த 32 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 32 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதங்கள் எழுதினார்.

இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 32 மீனவர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுவிக்கப்பட்ட 32 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 32 தமிழக மீனவர்களையும் இந்திய தூதரகம் தனது பராமரிப்பில் வைத்து, அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா போன்றவை இல்லாததால், அனைவருக்கு அவசரகால சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், அவர்களின் விமான டிக்கெட்டுகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்நிலையில், இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 32 தமிழக மீனவர்களும் கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் விடுவிக்கப்பட்ட 32 தமிழக மீனவர்களும் வந்திறங்கினர். விமானநிலைய வளாகத்தில் அவர்களை தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் 32 மீனவர்களையும் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு அதிகாரிகள் ஏற்றி வழியனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.