புதுக்கோட்டை அருகே பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொல்லப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி அடுத்த கரையப்பட்டியை சேர்ந்தவர் மோகன் (34). விவசாயி. இவருக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த தற்போது சென்னையில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோர்ட்டில் விவகாரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மோகன் ராஜ் கடந்த ஓராண்டுக்கு முன் அறந்தாங்கி அருகே உள்ள வைரிவயல் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா(எ)செண்பகவல்லியை(26) இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று இரவு மோகன் ராஜ் தனது வீட்டின் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார். கிருத்திகா வீட்டில் அறைக்குள் இருந்த கழிவறைக்கு சென்று விடடார். அறையில் தொட்டிலில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் கிருத்திகா வந்து பார்த்த போது தொட்டிலில் இருந்த குழந்தையை காணவில்லை. இதுகுறித்து கணவரை எழுப்பி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தையை தேடினர்.
அப்போது வீட்டு மாடியில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் குழந்தை கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் ராஜ் உடனடியாக குழந்தையை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மோகன்ராஜின் எதிர் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குழந்தையை கொன்றது யார், மோகன் ராஜ் வீட்டுக்கு யாராவது வந்து சென்றார்களா என்பது பற்றி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.