பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 25 கிராமங்களில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

344

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் பொங்கலையொட்டி நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் வீரமாங்குடி, செம்மங்குடி, பட்டுக்குடி, புத்தூர், மணலூர், உள்ளிக்கடை என 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

ஒரு காலத்தில் ஒரு கிராமத்திற்கு குறைந்தது 50 வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இருந்த நிலையில் தற்போது ஒன்று, இரண்டு ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் தொழில் கடுமையாக நசிந்து போன நிலையில் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்து கிடைக்கின்றனர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
இது குறித்து உள்ளிக்கடையை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கூறுகையில், முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 5 முதல் 6 டன் கரும்பு வெட்டுவோம்.

ஒரு ஊருக்கு 50 வெல்லம் தயாரிக்கும் ஆலை இருந்த நிலையில், தற்போது உள்ளிக்கடையில் 3 ஆலைகள் மட்டுமே உள்ளன. வெல்லத்திற்கு போதிய விலை இல்லாததால் பல இடங்களில் சர்க்கரையை வாங்கி அதனுடன் கரும்பு சாரையும், கெமிக்கலையும் சேர்த்து தயாரித்து விற்பனை செய்யும் சூழல் உள்ளது. இதனால் எங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், ஆட்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு சிப்பம் (30 கிலோ) ரூ.1400 வரை விற்பனை செய்கிறோம். அதை இடைத்தரகர்கள் வாங்கி கொள்ளை லாபத்தில் கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். தரமான வெல்லம் தயாரிக்கும் எங்களுக்கு கிலோவிற்கு ரூ.70 கிடைத்தால் நிலையை சமாளிக்கலாம். எனவே நாட்டு வெல்லம் தயாரிப்பை ஊக்குவிக்க அரசே வெல்லத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதில் நாட்டு வெல்லத்தை விற்பனை செய்ய வேண்டும். இதனால் மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன் நலிவுற்ற விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும். வெல்லம் தயாரிக்க மானிய விலையில் இயந்திரங்கள் வழங்க வேண்டும். இதை நிறைவேற்றினால் தற்போது கசப்புடன் உள்ள எங்களது வாழ்க்கை இனிப்பாக மாறும் என்று தெரிவித்துள்ளனர்.