புதுக்கோட்டை அருகே கோர விபத்து: கணவன், மனைவி பலி..

2410

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே இளையாவயல் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (65). விவசாயி. இவரது மனைவி இளஞ்சியம். இவர்களுக்கு சொந்தமான வயல் குளத்தூர் புறவழிச்சாலையில் உள்ளது. இன்று வயல் பகுதியில் தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு இருவரும் சாலையோரம் இருந்த மரத்தின் நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக புதுக்கோட்டையில்
இருந்து வந்த கார் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கணவன்-மனைவி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் காருக்கு அடியில் சிக்கிக் கொண்ட இளஞ்சியத்தை கார் சிறிது தூரம் இழுத்துக் கொண்டு சென்றது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாலையில் சென்றவர்கள் கற்களை எடுத்து காரின் மீது வீசி நிறுத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து படுகாயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அருணாச்சலம் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளஞ்சியமும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.