ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஜூலை. 23-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அம்மன் வீதியுலாவும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருளச்செய்து தேரோடும் நான்கு வீதிகள் வழியாக ஏராளமான பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில், கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டனர். கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.