செல்லிடப்பேசி, தொலைக்காட்சி விற்பனையில் உலக அளவில் முன்னிலையில் இருக்கும் சாம்சங் நிறுவனம், இந்தியாவில், அல்ட்ரா – ப்ரீமியம் லக்சரி மைக்ரோ எல்இடி டிவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த புதிய மைக்ரோ எல்இடி டிவி 110 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ-எல்இடி தொலைக்காட்சியானது, ஒளி மற்றும் வண்ணங்களை மிக நேர்த்தியாக வழங்குவதால், டிவியை பார்ப்பவர்களுக்கு மிகச் சிறந்த அனுபவம் கிடைக்கும். அதிலிருக்கும் துல்லியத்தன்மை வேறெதிலும் இல்லாத வகையில் அமையும் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனமானது, மிகச் சிறந்த பொருள்களை தொலைக்காட்சித் தயாரிப்புக்குப் பயன்படுத்தியிருக்கிறது. நாளடைவில் தொலைக்காட்சியின் ஒளித்திறன் மங்குவது போல இந்த தொலைக்காட்சியின் ஒளித்திறன் மங்குவதில்லை.
இந்த டிவியை பார்க்கும்போது, ஒரு திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவம் கிடைக்குமாம். 24 லட்சம் மைக்ரோ மீட்டர் அளவுள்ள சிறிய எல்இடிக்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். உலகிலேயே மிகவும் கடினமான உலோகம் என்று அழைக்கப்படும் சஃபைர் கொண்டு இந்த தொலைக்காட்சியை தொழில்நுட்ப நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.
ஆம்பியண்ட் பிளஸ் மோடியில் இந்த டிவையை வைத்தால், சுவற்றிலேயே ஒரு டிஸ்ப்ளே போல இது மாறிவிடும் என்றும் கூறுகிறார்கள்.
இவ்வளவு சிறப்பம்சங்கள் பொருந்திய இந்த தொலைக்காட்சியின் விலைதான் உண்மையிலேயே மிகப்பெரிய சிறப்பு. அதாவது, இந்திய ரூபாயில், இந்த தொலைக்காட்சியின் விலை ரூ.1,14,99,000, அதாவது கிட்டத்தட்ட கோடியே 15 லட்சம் என்று அதன் இணையதளத்தில் விலை நிலவரம் தெரிவிக்கிறது.