புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே திருவண்ணாகோவில்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (69). இவர் குடும்பத்துடன் பல வருடங்களாக சென்னையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கணேசன் திருவண்ணாகோவில்பட்டியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் கணேசன் அவரது வீட்டின் அருகில் இறந்து கிடந்தார்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து இலுப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு இலுப்பூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இந்த நாய் சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையே போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு
செய்து, கணேசனை யாரும் அடித்துக்கொலை செய்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.