புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். புதுக்கோட்டை அருகே பூவரசகுடியில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் அன்சாரி (46). இவர் தனது மனைவி நஜ்ரத் பேகம், தாய் ஆசியா பீவி ஆகியோருடன் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பாதுகாப்புபணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை அப்புறப்படுத்தி மனு கொடுக்க அறிவுறுத்தினர்.
மேலும் அன்சாரி தனக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், சம்பளம் வழங்க மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் குடும்பத்துடன் கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி மனு கொடுப்பதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார். அவரை கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அழைத்து சென்று போலீசார் மனு கொடுக்க வைத்தனர்.
மாவட்டவருவாய் அலுவலர் மனுவை பெற்று சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அன்சாரி தற்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.