புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உடையாளிப்பட்டி அருகே நெய்வேலி முனியன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த முனியய்யா (30), முத்தையா (62) ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, இருதரப்பை சேர்ந்தவர்களும் அரிவாள், இரும்பு கம்பியால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் முனியய்யா, முத்தையா, பேபி (58) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடையாளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட நெய்வேலி பகுதியை சேர்ந்த சரவணன் (40), கோவிந்தராசு (34), விஜயகுமார் (60), மதியழகன் (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.