கொத்தமங்கலம் பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா…

308

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான மது எடுப்பு திருவிழா இன்று நடந்தது.

கிராமத்தில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குலதெய்வ கோவில்களில் குடங்களில் நெல் நிரப்பி, தென்னம் பாளைகளை வைத்து மலர்கள் மற்றும் காகிதப் பூக்களால் அலங்காரம் செய்து பெண்கள் கும்மியடித்தனர்.

பின்னர் மாலை தாரை, தப்பட்டை முழங்க, வாணவேடிக்கைகளுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் கும்மியாட்டத்துடன் மதுக்குடங்களை தூக்கிக் கொண்டு ஊர்வலமாக மண்ணடித் திடலைச் சுற்றி பிடாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் தென்னம்பாளையை கோவிலில் வைத்து அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.