மருத்துவ கலந்தாய்வு; புதுக்கோட்டையில் 19 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது

649


தமிழ்நாடு அரசின் 7.5% அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உள் இடஒதுக்கீட்டிற்கான மருத்துவப் படிப்பிற்கான கந்தாய்வு நேற்று காலை தொடங்கிய நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 50 மாணவ, மாணவிகள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது

இதில் முதல்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 18 பேருக்கு பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கும் ஒரு மாணவிக்கு பிடிஎஸ் படிக்கவும் இடம் கிடைத்துள்ளது.

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுருதி, ஜனனி, சுபதாரணி ஆகிய 3 பேரும், சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஹரிராஜ், ஜெகதீஸ்வரன் ஆகிய 2 பேரும், அதே ஊரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ராஜேஸ்வரி, நிவேதா ஆகிய இருவரும், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பாலகிருஷ்ணன், மனோஜ், பரம்பூர் பிரவீன், வெண்ணாவல்குடி நந்தகுமாரன், கந்தர்வக்கோட்டை பவித்ரா, சூரியூர் பிரகாஷ், தாஞ்சூர் மகேஸ்வரன், ராப்பூசல் காயத்திரி, விராலிமலை அறிவுநிதி, அரிமளம் ரெத்தினவேல், கல்லாக்கோட்டை யுவதிகா என 18 மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் கலந்து கொண்டு எம்பிபிஎஸ் படிக்கவும் சந்தைப்பேட்டை மாணவி செல்லமுத்து பிடிஎஸ் படிக்கவும் என 19 மாணவ மாணவிகளும் பல்வேறு கல்லூரிகளை தேர்வு செய்து பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட குறைந்துள்ளது அதாவது 7.5% உள் இட ஒதுக்கீடு வந்த முதல் ஆண்டில் 18 மாணவ, மாணவிகளும், அடுத்த ஆண்டில் 38 மாணவ, மாணவிகளும் தேர்வாகி மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு 18 மாணவ, மாணவிகள் மட்டுமே மருத்துவம் படிக்கத் தேர்வானார்கள் ஆனால் இந்த ஆண்டு 19 பேர் தேர்வாகி உள்ளதாக கூறுகின்றனர்