புதுக்கோட்டையில் ரவுடியிசம் தலைதூக்குவதால் மக்கள் அச்சம்…

1910

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிறுத்துமிடத்தில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மதியம் திரண்டிருந்தனர். சிறிது நேரத்தில் இருதரப்பினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதை பார்த்த பெண் பயணிகள் அலறியடித்து ஓடினர். அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். போலீசார் வந்து விசாரித்தபோது, பெண்களை கிண்டல் செய்ததில் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை கொண்டு மோதலில் ஈடுபட்ட இளைஞர் களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுகை நகரில் கடந்த சில மாதங்களாக பொது இடங்களில் வாலிபர்கள் ரகளையில் ஈடுபடுவது, கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பதிவு எண்கள் இல்லாத பைக்குகளில் வேகமாக செல்வது, நாய் குரைப்பது, குழந்தை அழுவது போன்ற வினோதமாக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பொருத்திக் கொண்டு சாலையில் செல்வோரை

அச்சுறுத்தும் செயல்களிலும் இளைஞர்கள்சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவிகள் நடந்து செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ள சாலைகளில் உயர்தர பைக்குகளில் வேகமாக சென்று ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். சில இளைஞர்கள் தங்களை அடையாளம் கண்டுக்கொள்ளக்கூடாது என்பதற்காக தலையில் தொப்பி மற்றும் முகத்தை மாஸ்க்கினால் மறைத்து கொண்டு செல்கின்றனர். நகரின் விரிவாக்க பகுதிகளில் பூங்கா, குளக்கரை, மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் கஞ்சா புகைப்பது, போதை ஊசி போட்டுக்கொள்வது, மது அருந்துவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.

நகராட்சி 41 வது வார்டு செல்லையா நகர் பின்புறம் உள்ள தானாதி குளக்கரை, குன்னாங்குடி குளக்கரை ஆகியவற்றில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை வாலிபர்கள் மது அருந்திவிட்டு அந்த வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் கலெக்டர், எஸ்பி, டிஆர்ஓ என்று உயர் பதவிகளில் பெண் அதிகாரிகள் உள்ள நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு. இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகரில் அதிக ரித்து வரும் ரவுடியிசத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பள்ளி, கல்லுாரி வகுப்புகள் தொடங்கும் மற்றும்முடிவடையும் காலை, மாலை நேரங்களில் கல்வி நிறுவனங்கள், பஸ் நிலை யம் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். நகரின் விரிவாக்க பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.