அறந்தாங்கி அருகே குடியிருப்பு பகுதிகளில் ரிங்ரோடு அமைக்க எதிர்ப்பு…

796

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ஒன்றிய அரசின் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமான அறந்தாங்கியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புறவழிச்சாலை (ரிங் ரோட்) பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக அறந்தாங்கி நகர் பகுதியை உள்ளடக்கி அதன் புறபகுதியான பாக்குடி, வைரிவயல், ரெத்தினக்கோட்டை ஊராட்சி, கூத்தாடிவயல் போன்ற கிராமங்களை தொட்டும், வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மீமிசல், கட்டுமாவடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நெடுஞ்சாலைகளை இணைத்தும் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.

11 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட புறவழிச்சாலையில் 7 கிலோ மீட்டர் வரை நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்கூத்தாடிவயல் பகுதியில் விளைநிலம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புறவழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக துறை அதிகாரிகள் நில அளவை செய்து எல்லைகற்கள் பதிக்கும்போது அங்கே சென்ற பொதுமக்கள் விளை நிலத்தில் சாலை அமைக்கக் கூடாது, அதற்கு பதிலாக மாற்று வழியில் சாலை அமைக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு உரிய தீர்வு எட்டப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதனையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.