பாசன கண்மாய்க்கு, நீர் வரத்துக்கால்வாய் அமைத்து கொடுத்த திருவாவடுதுறை ஆதீன தம்பிரான் கண்ணப்பர் கல்வெட்டு சான்று கண்டுபிடிப்பு

284புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) குளத்து குடியிருப்பு கிராமத்தில் பழமையான பாலம் இருப்பது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பூமி. ஞானசிவம் அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராசேந்திரன் கள ஆய்வு மேற்கொண்டு பாலத்திலிருந்த கல்வெட்டை படியெடுத்தனர். அப்போது திருவாவடுதுறை ஆதீனத்தின் காறுபாறாக இருந்த கண்ணப்பதம்பிரான் என்பாரின் உத்திரவுபடிக்கு பாலம் கட்டப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,
திருவாடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க தலமாகும். ஆதீனத்தின் பதினேழாவது பட்டமாக இருந்த அம்பலவான தேசிகர் காலத்தில் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிரான் 1889 வருடம் ஆகஸ்டு மாதம் மக்களின் விவசாய பயன்பாட்டிற்காக, வெள்ளாற்றிலிருந்து வாத்தலையை (சிறு கால்வாய்) வெட்டி ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய்க்கு நீரைக்கொண்டு வந்துள்ளார்.

குளத்துகுடியிருப்பு கிராம மக்கள் திருப்பெருந்துறை சென்று வருவதற்கு பாலத்தையும், பாலத்திலேயே சிறப்பான பலகை அடைப்பு முறையில் நீரின் போக்கை கட்டுப்படுத்துவதற்கு கலிங்கு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார், போக்குவரத்து மற்றும் நீர் மேலாண்மை ஆகிய இரு தேவைகளையும் உணர்ந்து ஒரே கட்டுமானத்தில் இதனை நிறைவேற்றி உதவியுள்ளார். இது முழுக்க கருங்கல், செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டுமானமாக உள்ளது.

கல்வெட்டு :
மூன்றரை அடி உயரம் , ஒன்றரை அடி அகலத்துடன் உள்ள பலகைக்கல்லில், 14 வரிகளில் “சிவமயம் 1889 வருசம் ஆகஸ்டு மீ . விரோதி வருசம் ஆவணி மீம் இந்த வாத்தலையும் வெட்டி யிந்த கலுங்கு வேலையும் ட்றஸ்ட்டி கண்ணப்ப தம்பிறான் அவர்கள் உத்திரவுபடி கட்டி முடித்தது” என்று பாலத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டில் தகவலாக பொறிக்கப்பட்டுள்ளது.

கண்ணப்ப தம்பிரான் :
திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் பட்டமேற்று நமசிவாய தேசிகர் என்பவர் 15 ஆம் நூற்றாண்டில் ஆதீனத்தை தொடங்கியுள்ளார். கண்ணப்ப தம்பிரான் 16, 17 தேசிகர் காலத்தில் வாழ்ந்துள்ளார் , வேணுவன லிங்க தம்பிரான் பெரிய காறுபாறாக இருந்த போது இவர் காறுபாறாக இருந்துள்ளார். 22.10.1887 ஆம் ஆண்டு வேணுவன லிங்கனார் விருப்பப்படி திருவாவடுதுறை ஆதீன மடத்தில் , சேற்றூர் மற்றும் சிவகிரி ஜெமீன் தார்கள் கொடுத்த தேக்கு மரத்தைக்கொண்டு புதுமையான கட்டுமான முறையில் கொலு மண்டபத்தை அமைத்தார். இதற்கு வேணு வன லிங்க விலாசம் என பெயரும் இட்டார். ஆவுடையார் கோவில் திருப்பணியிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். இதன் மூலம் இவர் கட்டுமான நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருந்தவர் என அறிய முடிகிறது .
கண்ணப்ப தம்பிரான் காசியில் இருந்தபோது காசி மடத்திற்கு வெவ்வேறு காலகட்டங்களில் இடம் வாங்கியுள்ளார்.

ஆதீனத்தின் சார்பில் தமிழ் தாத்தா உ வே . சாமிநாத ஐயரை ஆதரித்த காரணத்தால் முழு ஈடுபாட்டுடன் சுவடிகளை திரட்டி பல நூல்களை பதிப்பித்தார். இவர் கண்ணப்ப தம்பிரானிடம் தமது தேடல் பணிக்காக உதவிகளை பெற்றவர்.
ஆதீனம் கல்வி , சமூக ஒற்றுமை , பொதுப்பணி , தமிழ் மொழி வளர்ச்சி என பல்வேறு பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளதையும் , ஆன்மீகப்பணியோடு அறப்பணிகளையும் செய்துள்ளதை இப்புதிய கல்வெட்டு சான்று உறுதி செய்கிறது. என்றார் . ஆய்வின் போது தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர்கள் பகத்சிங் , கே. சுரேஷ் , ந.ரமேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர் .