பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியில் இதுவரை 32 வகையான பொருட்கள் கிடைத்துள்ளது..

632

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியில் இதுவரை 32 வகையான பொருட்கள் கிடைத்துள்ளது.
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கான தொல்லியல் அடையாள சான்றுகள் கிடைத்துள்ளன.

இந்த இடத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 20-ந் தேதி முதல் அகழாய்வு பணி நடைபெறுகிறது. இதில் தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 5 இடங்களில் குழிகள் சிறிது, சிறிதாக தோண்டி அதில் இருந்து பொருட்கள் கண்டெடுக்கப்படுகிறது.

இதுவரை 32 வகையான பொருட்கள் கிடைத்துள்ளது. இதில் கண்ணாடி வளையல், கண்ணாடி மணிகள், (ஊதா, மஞ்சள் கருப்பு நிறம்), சுடுமண் மணிகள், கென்டி மூக்கு, வட்ட சில்லுகள், மெருகேற்றப்பட்ட பளபளப்பான ஊதா நிற பானை ஓடுகள், செங்கல் கட்டுமானம் கிடைத்துள்ளது.
இது குறித்து அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், தற்போது கிடைத்துள்ள பொருட்கள் 10, 15-ம் நூற்றாண்டிற்குரியவையாகும். தொடர்ந்து மண் தோண்டப்பட்டு வருகிறது. இதில் மேலும் பல அரிய பொருட்கள் கிடைக்கலாம்.

முதற்கட்ட அகழாய்வு வருகிற செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. அதன்பின் அடுத்த கட்ட அகழாய்வு நடைபெறும் என்றனர். தற்போது விடுமுறை நாட்கள் தவிர்த்து அகழாய்வு பணி தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சேகரிக்கப்படும் மொத்த பொருட்கள் அனைத்தும் அகழாய்வு பணி முடிவடைந்ததும் காட்சிப்படுத்தப்படும்.