புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்கள் தொடா்பாக போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. காணாமல் போன செல்போன்களை மீட்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் , சைபர் கிரைம் போலீசார் மூலம் 105 செல்போன்களை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.21½ லட்சம் ஆகும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, செல்போன்களை மீட்ட போலீசாரை பாராட்டி, பரிசுகள் வழங்கினார். இதே போல கடந்த ஆண்டுகளில் 2 முறை 170 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் செல்போன் சம்பந்தமான புகார்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைக்க போலீசாருக்கு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவிட்டுள்ளார்.