கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு…! மாடு முட்டியதில் காவலர் உட்பட இருவர் பலி…!

459

அரிமளம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்சியில் 63 பேர் காயமடைந்தனர், இதில் 23 பேர் படுகாயம், ஒரு போலீஸ்காரர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கல்லூர் அரியநாயகி அம்மன் கோயில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு செம்முனீஸ்வரர் மஞ்சுவிரட்டு திடலில் நேற்று காலை 10 மணியளவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், மேலூர், ராமநாதபுரம், காரைக்குடி, அறந்தாங்கி, கே.புதுப்பட்டி, கண்டனூர், புதுவயல், பள்ளத்தூர், திருமயம், சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

முதலில் உள்ளூர் கோயில் காளை மஞ்சுவிரட்டு திடலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது, இதனை தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்த காளைகளை மாட்டின் உரிமையாளர்கள் அவிழ்த்துவிட்டனர், இதனிடையே விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்காத வகையில் காளைகள், மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் காளைகள் மற்றும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழா கமிட்டியினர், போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில் வாகனத்தில் ஏற்றி வந்த காளைகளை மஞ்சுவிரட்டு திடலில் நீண்ட நேரம் காத்திருந்த அவிழ்க்க முடியாமல் போனதால் ஒரு சில மாட்டின் உரிமையாளர்கள் கட்டுபாடுகளின்றி மாடுகளை ஆங்காங்கே அவிழ்த்துவிட தொடங்கினர். இதனால் மஞ்சுவிரட்டு திடல் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவிழ்க்கப்பட்ட காளைகள் பயந்து நாலாபுறமும் மிரண்டு ஓடின.


கூட்டத்தை கண்டு மிரண்டு ஓடிய காளைகளை அப்பகுதி இளைஞர்கள் விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர், இதில் ஒருசில காளைகள் அப்பகுதி இளைஞர்களிடம் பிடிபட்ட நிலையில் பெரும்பாலான காளைகள் தப்பித்து கூட்டத்திற்குள் ஓடின, அப்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்து காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உட்பட 63 பேர் காயமடைந்தனர். சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையம் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் படுகாயமடைந்த 23 பேர் புதுக்கோட்டை, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரம், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர், இதனைதொடர்ந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட மாட்டின் உரிமையாளருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது, மஞ்சுவிரட்டை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூர் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். கே.புதுப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மஞ்சுவிரட்டில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் முதலமைச்சர் நிவாரணநிதி..


ஒரு காவலர் மற்றும் தச்சு தொழிலாளி உயிரிழப்பு:


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல் நிலையத்தில் அறந்தாங்கி எல் என் புரம் பகுதியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் மகன் நவநீதகிருஷ்ணன்(31) காவலராக பணிபுரிந்து வந்தார். கல்லூர் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்த நவநீதகிருஷ்ணனை எதிர்பாராத விதமாக மாடு நெஞ்சில் மூட்டியது. இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மஞ்சுவிரட்டு திடலில் நவநீதகிருஷ்ணன் சுருண்டு விழுந்தார். இதனைத் தொடர்ந்து சக போலீசார் அவரை மீட்டு மஞ்சுவிரட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை முகாமிற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நவநீதகிருஷ்ணன் உயிர் இழந்தார்.

இதேபோல் அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காத்தப்பன் மகன் சுப்ரமணியன் (35) தச்சு வேலை செய்து வந்தார், இவர் நேற்று கல்லூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு பார்க்க வந்திருந்தார். அப்போது மஞ்சு விரட்டு திடலில் மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்த நிலையில் ஆம்புலன்சில் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழப்புகள் குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.