பெண் பார்க்க சென்ற போது டூவீலர் விபத்தில் தந்தை-மகன் பலி…

1213

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கடம்பராயன்பட்டி உசிலம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி (60). இவரது மகன் சந்தியகுமார் (30). சமையல் கலைஞர்கள். சந்தியகுமாருக்கு பெண் பார்ப்பதற்காக இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உசிலம்பட்டியில் இருந்து ஒரு டூவீலரில் சென்றனர்.

அப்போது இலுப்பூர் மேட்டுச்சாலையில் வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தந்தை-மகன் ஆகிய இருவரும் டூவீலரில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து இலுப்பூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய வாகனம் டிப்பர் லாரி என்பதும், அந்த லாரி திருநல்லூர் கலர்பட்டியை சேர்ந்த சரவணன் (37) என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தந்தையும், மகனும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். பெண் பார்க்க சென்ற தந்தை-மகன் இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.