லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

61

லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது! வீட்டுவரி ரசீதுக்கு ரூ. 13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை கார் டிரைவருடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை வீட்டுவரி ரசீதுக்கு ரூ. 13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை கார் டிரைவருடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

வீட்டுவரி ரசீது சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தன்னுடைய தந்தை மணிமுத்து பெயரில் இருந்த வீடு மற்றும் இடம் ஆகியவற்றை தன் பெயருக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெயர் மாற்றிக் கொண்டார்.இதைதொடர்ந்து அவர் கல்லல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தன் பெயருக்கு வீட்டுவரி ரசீது வழங்கும்படி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

ரூ.13 ஆயிரம் லஞ்சம் பாலாஜியின் பெயருக்கு வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு ரூ.13 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கல்லல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள நாச்சியப்பன்(வயது 55) கேட்டதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க விரும்பாத பாலாஜி, இதுகுறித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் ஏற்பாட்டின் பேரில் பாலாஜி, கல்லலில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த தலைவர் நாச்சியப்பனிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்தார். நாச்சியப்பன் அந்த பணத்தை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த தன்னுடைய கார் டிரைவரும் நண்பருமான சங்கர் என்பவரிடம் கொடுக்கும்படி கூறினாராம்.

இதைத்தொடர்ந்து பாலாஜி, வெளியில் நின்று கொண்டிருந்த சங்கரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது மற்றும் போலீசார், கையும் களவுமாக சங்கரை கைது செய்தனர். அத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்