புதுக்கோட்டை :
புதுக்கோட்டை நகரில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் ,போக்குவரத்து காவல்துறை வாகன நிறுத்தம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாத காரணத்தாலும், நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து புதுக்கோட்டை நகரம் மக்களுக்கு இடையூறாக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொண்டைமான் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட புதுக்கோட்டை நகரமானது, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரமைப்புக்கு தேசிய அளவில் பெயர் பெற்ற நகரமாக விளங்கியது. மேலும், மைசூரு, திருவனந்தபுரம், பரோடா போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட அழகிய நகரங்களின் வரிசையில் புதுக்கோட்டையும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால்,50 வருடங்கள் கடந்த பிறகும் நகரம் வளர்ந்ததே தவிர நகரின் சாலைகள் இன்றளவும் அகலபடுத்தாமல் இன்னும் அதே அளவுடன் சாலைகள் உள்ளது. கடந்த வருடங்களிள் நகரின் விரிவாக்கப் பகுதிகள் நான்கு புறமும் அதிகரித்த பிறகு, நகருக்குள்ளும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. வாய்க்கால்கள் முறையாகப் பராமரிக்காத காரணத்தால், பழைய ஒழுங்குப்படுத்தப்பட்ட நகரமைப்பு முற்றிலும் சீர்குலைந்து போனது.
குறிப்பாக, புதுக்கோட்டை நகரின் வணிகப் பகுதியான கீழ ராஜவீதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே காலப்போக்கில் மாறிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதே வீதியில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சில நாட்களில் அதே பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் , தெற்கு 3 ஆம் வீதி, தெற்கு 4 ஆம் வீதி, வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி உள்ளிட்ட இந்த வீதிகளில் எப்போதும் பகல் நேரங்களில் கடும் நெருக்கடியுடன் கூடிய கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழல் காணப்படுகின்றது. இதனால் சாலையோரங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால், அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட எளிதாகக் கடந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்படுகிறது. டிவிஎஸ் நகரில் இருந்து அரிமளம் செல்லும் முக்கிய வீதிகளில் கூட இரு சக்கர வாகனப் பெருக்கத்தால், முறைப்படுத்தப்படாத போக்குவரத்து காரணமாக கடும் நெரிசலுடனேயே காணப்படுகிறது.
மேலும், போக்குவரத்துக் காவலர்கள் நான்கு வழிச்சாலைகளில் நின்று அவ்வப்போது போக்குவரத்தை சரி செய்ய முயன்றாலும், அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழலே அமைந்துள்ளது.
புதுக்கோட்டை மாநகரின் பிரதான சாலைகள் ஆன
புதிய பேருந்து நிலையம்- மருத்துவக் கல்லூரி சாலை, அண்ணாசிலை -கேப்பரை வரை (ஆலங்குடி சாலை) , பழைய பேருந்து நிலையம்- மாலையீடு (திருமயம் சாலைகளை) அகலபடுத்தி செண்டர் மீடியன் அமைத்து புதுக்கோட்டை மாநகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, மாவட்டக் காவல்துறை நகரின் முக்கிய தெருக்களில் மாதிரி வரைபடத்தை வைத்து, நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் நிறுத்தத்தை முறைப்படுத்தி, சாலை தடுப்புகள் மற்றும் சாலை விரிவாக்க பணிகளை முறையாக செய்து புதுக்கோட்டை நகர மக்களின் நெடு நாள் கோரிக்கையாக உள்ளது.