தமிழ்நாட்டில் நேற்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தோல்வி பயத்தால் 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். சென்னை ஆவடியில் பாரதி நகரில் வசித்து வரும் கனகராஜ் மகன் 17 வயது தேவா ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 2 பாடங்களில் தோல்வி அடைந்ததில் விரக்தி அடைந்த தேவா, தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவில் வசித்து வரும் தனியார் பள்ளி மாணவி 17 வயது தாருண்யா 12 ஆம் வகுப்பு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தில் வசித்து வரும் 19 வயது ரமணி, கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டு தனித் தேர்வராக எழுதினார். இதில் மீண்டும் தோல்வி அடைந்ததில் மனமுடைந்த மாணவி ரமணி, மன வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதேபோல் வானூர் அருகே சேமமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் 18 வயது அருந்ததி, 600-க்கு 500 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் என்று எதிர்பார்த்த நிலையில், 380 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளார். இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த மாணவி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்வு முடிவு வெளியாகும் முன்பே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை நாராயண குப்பம் கிராமத்தில் வசித்து வரும் 17 வயது ஹரி, 11 ஆம் வகுப்பில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை, அதற்கும் தேர்வு எழுதி இருந்தார். இந்நிலையில், நேற்று தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாக தேர்வு முடிவு குறித்த பயமும், கலக்கமும் ஏற்பட்டதால் காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட ஹரி 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரியகுளம் மாணவி தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் 17 வயது சுபஸ்ரீ மகா பிரத்திநிஷா பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவர் 5 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் காதலன் தோல்வி.. ப்ளஸ்-1 மாணவி தற்கொலை!
தமிழகத்தில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியாகின. இந்தாண்டு பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்ததால் உற்சாகம் அடைந்தனர். தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் மாணவ, மாணவிகள் வெற்றியை கொண்டாடினர்.
இந்நிலையில், சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் டில்லி- சாந்தி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் நந்தினி (16), அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
மாணவி நந்தினி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தொங்குவதை பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்துசென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவி எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார் என பெற்றோர், போலீசார் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது.
நீண்டநேர விசாரணைக்கு பிறகே மாணவியின் இறப்புக்கு காரணம் தெரியவந்தது. அதாவது, ஆவடி கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்த தேவா (17) என்பவர், பிளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் நேற்று விரக்தியில் தேவா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர் தேவாவும், மாணவி நந்தினியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த நந்தினி, அந்த விரக்தியில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் மாணவி நந்தினி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.