புதுக்கோட்டை அருகே சமன சமயத்தின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

594

குண்டோடி காளியாக வழிபாட்டிலிருக்கும் மகாவீரர் சிற்பமும், முக்குடை கோட்டுருவ நடுகல்லும், ஆவுடையார் கோவில் அருகே கண்டுபிடிப்பு .

புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொடிக்குளம் பொறியியல் மாணவர் அபிமன்யு, வெளிநாட்டில் பணிபுரியும் டி.களத்தூர் பெரி.முத்துத்துரை ஆகியோர் அளித்த தகவலின் படி , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைவர் கரு ராஜேந்திரன் துணைத் தலைவர் கஸ்தூரிங்கள், உறுப்பினர் மா. இளங்கோ ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மகாவீரர் சமண சிற்பம் மற்றும் முக்குடை நிலதான கோட்டுருவ நடுகல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது .

இந்த கண்டுபிடிப்பு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ மணிகண்டன் கூறியதாவது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறுகானுர் கிராமத்தின் குண்டோடி காளி திடலில் சமண பள்ளிக்கு நிலதானம் வழங்கிய முக்குடைக்கல்லும் , மகாவீரர் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்குடைக்கல்லின் மையத்தில் காணப்படும் முக்குடை அமைப்பு சமண சமயத்தின் முக்காலத்தையும் உணர்த்தும் சமணத்தின் புனித சின்னமாகும் .

இதன் இரு புறங்களிலும் குத்துவிளக்கு பொறிக்கப்பட்டிருக்கிறது இடது புறம் மேற்பகுதியில் காணப்படும் மேழி (ஏர்)அமைப்பு, வேளாண் குடிகள் சமண பள்ளிக்கு நிலதானம் வழங்கியதை குறிப்பதாகவும், வலது புறம் மேற் பகுதியில் வேலியிட்ட மர கோட்டுருவம், விவசாய நிலத்தை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட குறியீடாக கருதலாம். முக்குடைக்கு மேலாக மங்கள மேடு அமைப்பும் கோட்டுருவமாக சிதைந்து காணப்படுகிறது . இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்.

மகாவீரர் சிற்பம்

குண்டோடி காளி என்ற பெயரில் வழிபாட்டிலிருக்கும் மகாவீரர் சிற்பம் , இரண்டேகால் அடி அகலத்துடனும், மூன்றரை அடி உயரத்துடனும் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரர் திகம்பரராக, தியான கோலத்துடன், சுருள் முடி தலையுடனும், திறந்த கண்கள், நுனியில் சிறிது சேதமடைந்த மூக்கு , நீண்ட துளையுடைய காதுகள் , கீழ் உதடு சிதைந்தும், விரிந்த மார்புடன் அமைக்கப்பட்டுள்ளது .

தலையின் பின்புறமாக பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம் , சகல பாசானம் எனும் முக்குடையும், அதன் இரு மருங்கிலும் குங்கிலிய மரமும், சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது, மூன்று சிங்க முத்திரைகொண்ட அரியாசனத்தில் மகாவீரர் அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக வழிபட்டு வரும் ராஜேஸ்வரி குடும்பத்தினர் சைவ படையலிட்டு வழிபட்டு வருவது குறிப்பிடதக்கது. இதன் உருவமைப்பு ஒப்பீட்டின்படி பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த சிற்பமாக கருதலாம்.

ஆவுடையார்கோவில் கழுவேற்ற ஓவியம் சொல்லும் தகவல் உண்மையா ?

ஆவுடையார் கோவிலின் மண்டபக்கூரையில் நூறாண்டுகள் பழமையான ஓவியங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவையாக சமணர்கள் கழுவேற்றிய காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஆவுடையார் கோவில் பகுதியில் சமண தடயங்கள் ஏதும் கண்டறியப்படாமல் இருந்தது. இந்நிலையில் திருப்புனவாசல் கோவில் கருவறை விமானத்தின் தென்புற பிரஸ்தர பகுதியில் சமண கழுவேற்றும் சிற்பமும் அருகே மன்னன் மற்றும் சைவத்துறவி ஒருவர் நிற்பதுவாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்.

பத்தாம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் 16 கிமீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது. புதிய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என்றார் தலைமை ஆசிரியர் கா. அய்யர் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் ம. திருக்குறள் அரசன் , ம. லோகேஷ், சி.விஷ்ணுவர்தன், அ. கவினேஷ் , கோவில் பக்தர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.