புதுக்கோட்டை:
பணி ஓய்வு பெற்ற டபேதாரை, தமது காரில் வீட்டுக்கு அனுப்பி வைத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் டபேதாராக பணியாற்றியவர் அன்பழகன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு ஆட்சியர்களுக்கு அவர் பணியாற்றி உள்ளார். தற்போதைய புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிற்கும், அன்பழகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக டபேதாராக பணியாற்றி, கடந்த 29ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.

இதைத் தொடர்ந்து, ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், அவரது இல்லத்தில் அன்பழகனுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்வுகள் மிக விமரிசையாக நடைபெற்றது. அனைத்தும் முடிந்த பின்னர், அன்பழகனை தமது காரில் தாம் எப்போதும் அமரும் முன் இருக்கையில் உட்கார வைத்து, ஆட்சியர் கவிதா ராமு கவுரவித்தார்.

அன்பழகன் பயணித்த அதே காரில், பின் இருக்கையில் ஆட்சியர் கவிதா ராமுவும் அமர்ந்தார். பின்னர், அன்பழகனை அவரது வீட்டிற்கு கொண்டுபோய் விட்டு வந்தார்.

ஆட்சியராக இருந்தாலும், தம்மிடம் பணியாற்றி ஓய்வுபெற்ற டபேதாரை கவுரவித்து, வழியனுப்பிய கவிதா ராமுவை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.