வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர்.. பெரும் பரபரப்பு!

489

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இது தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி நீரை சோதனை செய்வதற்காக பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

டி.என்.ஏ சோதனை:
குறிப்பாக 11 பேர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று சிபிசிஐடி போலீசார் சந்தேகத்தில் உள்ளனர். இவர்களுடைய டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சிபிசிஐடி தலைப்பில் புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க டிஎன்ஏ டெஸ்ட் நடத்த அனுமதி கிடைத்த நிலையில், ரத்த மாதிரி பரிசோதனைக்கு வருகை தர 8 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ரத்த மாதிரி கொடுக்க வருமாறு 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், 3 பேர் மட்டுமே வந்த நிலையில், 8 பேர் ரத்த மாதிரி தர வராதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதையடுத்து நீதிமன்றம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி வழங்கியது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


அதன்படி, வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க, இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில பயிற்சி காவலர் முரளி ராஜா, இறையூர் மற்றும் கீழ முத்துக்காட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் என மூவர் மட்டுமே இன்று டிஎன்ஏ பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகினர்.

அவர்களிடம் மட்டும் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மற்ற எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட மூவரின் ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

டிஎன்ஏ பரிசோதனை மூலம் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரத்த மாதிரி கொடுப்பதற்கு 8 பேர் வர மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்திற்கிடமான அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்றும் அவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.