திருச்சி ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோவில்
சித்திரை தேரோட்டம் ( 2023 )

160


ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும், தொண்டு செய்து அவருக்கு மனைவியானார். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது. எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது.



பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.

வஸ்திர மரியாதை இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் கோவில் வளாகத்தில் உள்ள கருடமண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்னர் அவை மேளதாளத்துடன் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.



பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் ரமேஷ் பட்டர், சுதர்சன் பட்டர் மற்றும் கோவில் பணியாளர்கள் வஸ்திர மரியாதையை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் வழங்கினர். இந்நிகழ்வில் அர்ச்சகர் சுந்தர் பட்டர், கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், மீனாட்சி, சரண்யா, வெங்கடேசன், துணை மேலாளர் சண்முகவடிவு, கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று சித்திரை தேரோட்டத்தின் போது தேரில் எழுந்தருளும் நம்பெருமாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து தேரோட்டம் கண்டருளுகிறார்.