குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டுக்கு சென்ற புதுக்கோட்டை இளைஞருக்கு நேர்ந்த துயரம்!!

645

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பெரியார் நகரைச் சேர்ந்த தம்பதி சுப்பையா- அழகி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கட்டிட தொழிலாளியான சுப்பையா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்துள்ளார். இதனால் அவர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், குடும்பத்தில் வறுமை ஏற்பட, அவரது மகன் வீரபாண்டி, வேலைக்காக பஹ்ரைன் நாட்டிற்கு சென்றார். அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைப் பார்த்து வந்தார். இந்நிலையில், வீரபாண்டி சாலை விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார். இதற்காக, அங்குள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்துள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

இது குறித்த தகவல் அறிந்த வீரபாண்டியின் தாய், தனது மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருமாறு கோரி, பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினார். இதையடுத்து, சுமார் நான்கு மாதங்களுக்கு பிறகு வீரபாண்டி, பஹ்ரைனில் இருந்து விமானம் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்

அப்போது அங்கிருந்த தாய் அழகி, தனது மகன் வீல் சேரில் அமர்ந்து வந்ததைப் பார்த்து கண்கலங்கினார். அத்துடன், “நான் யார் என்று தெரிகிறதா?” என்று தனது மகனிடம் அவர் கேட்க, அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

அதன் பிறகு அவசர ஊர்தி 108 வாகனம் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வீரபாண்டியை அழைத்துச் சென்றார்..