இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 14-04-2023.

419

தமிழ் வருட பிறப்பு ஒரு கண்ணோட்டம்!

சித்திரை 1 ம் தேதி தமிழ் வருடப்பிறப்பாக நாம் அனைவரும் கொண்டாடி வருகிறோம்.
அது பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
இன்று நாம் கலியுக #சுபகிருது வருடத்தை கடந்து கலியுக #சோபகிருது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழர்கள் கணக்கு படி 5125 வது வருடம்.

சித்திரை மாத முதல் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புது வருடம் வரவேற்கப்படுகிறது. இந்த புது வருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும்.

அன்றைய தினத்தில் நாம் அனைவரும் புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாகும்.

வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது ஐதீகம். அதனால் இந்த பதிவில் தமிழ் புத்தாண்டாகிய நாளை சித்திரை முதல் நாள் என்னென்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…

செய்ய வேண்டியவைகள்

  1. தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.
  2. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது.
  3. தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவை படைப்பது முறையாகும். அன்றைய நாளில் இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்குமாறு உணவானது அமைவது சிறப்பு.

பொதுவாக நல்ல நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை. ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று அத்தனை வகையான சுவைகளும் இடம் பெற்ற படையலை படைப்பது விசேஷம் ஆகும். அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு அறுசுவை உணவு புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது.

  1. சித்திரை மாத பிறப்பு என்பதால் கோடை காலத்தின் துவக்கத்தில் இருக்கிறோம். கோடை காலத்திற்கு உகந்த தானங்களை எல்லாம் புத்தாண்டின் துவக்கத்தில் செய்வது நல்லது.
  2. தோஷங்கள் நீங்கி வாழ்வு மலர உங்களால் முடிந்த அளவிற்கு குடை தானம், செருப்பு தானம், விசிறி தானம் ஆகியவற்றை செய்யலாம். மேலும் நீர் மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது போன்றவை செய்வதால் உங்களுடைய கர்மாக்கள் அனைத்தும் தீரும். பறவைகளுக்கு, விலங்குகளுக்கு வீட்டின் வாசலில் தண்ணீர் வைப்பதும் சிறப்பு.
  3. தமிழ் புத்தாண்டு அன்று இறை வழிபாடுகளில் ஈடுபடுவதும் உங்களை மென்மேலும் வளர செய்யும். இளநீர், நுங்கு, விளாம்பழம், தர்பூசணி போன்ற குளிர்ச்சி மிகுந்த பழங்களை வாங்கி தானம் செய்வதும், நீங்கள் சாப்பிடுவதும் மிகவும் நல்லது. தமிழ் புத்தாண்டு அன்று கடைக்கு சென்று நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்குவது மென்மேலும் அவைகள் பெருக செய்யும்.
  4. அதுபோல கல்லுப்பு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய மங்கல பொருட்களை வாங்குவதும் குடும்பத்தில் மென்மேலும் லட்சுமி கடாட்சத்தை உண்டு செய்யும்.

செய்யக்கூடாதவைகள்…

  1. அசைவம் சாப்பிடுவது, தீட்டுக் காரியங்கள் செய்வது, நகம் வெட்டுவதும், முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது.
  2. வீட்டில் இருக்கும் போது ஒட்டடைகளை அகற்ற கூடாது. வீட்டில் சேகரித்து வைக்கும் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது. புதிய பொருட்களை வாங்கலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை அன்றைய தினம் யாருக்கும் கொடுக்கக் கூடாது.
  3. மேலும் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது. கடன் வாங்கவும் கூடாது. தமிழ் புத்தாண்டில் செய்ய வேண்டியவைகளை செய்து, செய்ய தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து வளமாக வாழ தமிழ் அன்னையை வணங்குவது சிறப்பு…



தமிழர்களின் ஜோதிட கணிப்புப்படி, 60 ஆண்டுகள் ஒரு வட்டமாக கருதப்படுகிறது. ஆனால் நாம் பெரும்பாலும் ஆண்டுகளை பெரிதாக கருதுவது கிடையாது. இந்த 60 வருடங்களையும் 3ஆக பிரித்து, (20 வருடங்கள்)
1. உத்தம ஆண்டுகள்
2. மத்திம ஆண்டுகள்
3. அதம ஆண்டுகள்.

60 வருடங்களின் பெயர்கள் பின்வருமாறு.
1. பிரபவ – (1987-88)
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. முக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம – (2000-01)
15. விஷு
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி – (2010-11)
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஐய – (2014-15)
29. மன்மத – (2015-16)
30. துன்முகி (2016-17)
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி (2019 – 2020)
34. சார்வரி – (2020-21)
35. பிலவ (2021-2022)
36. சுபகிருது (2022-2023)
37. #சோபகிருது (2023-2024)
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. செளமிய
44. சாதாரண – (2030-31)
45. விரோதகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரெளத்திரி – (2040-41)
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய.
இதை சுழற்ச்சி முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

மேலும்,
சூரிய மாதம், சந்திர மாதம் என வருடத்தில் 2 உண்டு.
சூரியமாதம், சந்திர மாதம்.
1. மேழம், சித்திரை
2. விடை, வைகாசி
3. ஆடவை, ஆனி
4. கடகம், ஆடி
5. மடங்கல், ஆவணி
6. கன்னி, புரட்டாசி
7. துலை, ஐப்பசி
8. நளி, கார்த்திகை
9. சிலை, மார்கழி
10. சுறவம், தை,
11. கும்பம், மாசி
12. மீனம், பங்குனி.

நாம் சந்திர மாத ஆண்டுகளையே பின்பற்றுகிறோம். நம் முன்னோர்கள் பூமியின் சுழற்சியை வைத்து,என்றோவரும் அம்மாவாசை, பெளர்ணமி மிக எளிதாக கணக்கிட்டு சொல்லிவைத்தார்கள்.
மேலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது.
கால கணித வாய்ப்பாடு.
1 கற்பகம் = 1000 சதுர்யுகம்.
1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம்.
1 சதுர் யுகம் = 4 யுகம் 43,20,000 ஆண்டு
1 யுகம் = ——–
1 ஆண்டு வட்டம் = 60 ஆண்டு.
1 ஆண்டு = 12 மாதம் (365 நாள், 15 நாடி, 31 விநாடி 15 தற்பரை)
1 நாடி = 1440 விநாடி/24 நிமிடம்
1 விநாடி = 60 தற்பரை.

கிருத யுகம் 4*432000= 17,28,000 ஆண்டுகள்.
திரேதா யுகம் 3*432000= 12,96,000 ஆண்டுகள்.
துவாபர யுகம் 2*432000 = 8,64,000 ஆண்டுகள்.
கலியுகம் 1*432000 = 4,32,000 ஆண்டுகள்.

இவை அனைத்தும் தமிழ் புத்தாண்டின் சுருக்கமான விளக்கமே.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.