பொன்னமராவதி அருகே தூத்தூர் கண்மாயில் மீன்பிடி திருவிழா

263

பொன்னமராவதி அருகே தூத்தூர் கண்மாயில் மீன்பிடி திருவிழா: கெளுத்தி, ஜிலேபி, விரால் மீன்களை அள்ளி சென்றனர்..

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தில் மீன் பிடித்திருவிழா நடந்தது. தூத்தூர் கண்மாயில் மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் வற்றும் சூழலில் உள்ள பாசன கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.


இந்த வருடம் பொன்னமராவதி பகுதிகளில் பல்வேறு கண்மாய்களில் இதுவரை மீன்பிடி திருவிழா நடந்துள்ளது. ஆலவயல், கண்டியாநத்தம் ஊராட்சிகளை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் வழிபாடு செய்து கண்மாய் கரையில் நின்று மீன் பிடித்திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதனையடுத்து வலை, தூரி, ஊத்தா, கச்சா உள்ளிட்ட உபரகணங்களுடன் தயாராக இருந்த மக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் மீன்களை பிடித்தனர். அதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா,விரால் உள்ளிட்ட வகை மீன்கள் கிடைத்தன. இதில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.