பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

34பட்டா பெயர் மாற்றம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகிலா. விவசாயியான அகிலாவின் தந்தை வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் விவசாய நிலத்ைத ரூ.12 ஆயிரத்துக்கு சமீபத்தில் வாங்கியுள்ளார்.

அந்த நிலத்தை தனது தந்தை பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அவருடைய மனு அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலருக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது.

ரூ.5 ஆயிரம் லஞ்சம் மனுவை விசாரித்த அய்யம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி பழனியம்மாள் (வயது 44), பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்றும், லஞ்சம் கொடுக்காவிட்டால் பெயர் மாற்றம் செய்து கொடுக்க முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அகிலா, இதுபற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அகிலாவிடம் கொடுத்து, லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கும்படி கூறினர். கையும் களவுமாக சிக்கினார் இதைத்தொடர்ந்து, அந்த பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று மதியம் 2 மணி அளவில் அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அகிலா சென்றார். அப்போது, அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி பழனியம்மாளிடம் அகிலா ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார். அவர் அதை வாங்கி எண்ணியபோது, சாதாரண உடையில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். கைது மேலும் பழனியம்மாளின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரூ.35 ஆயிரம் இருந்தது. அந்த பணத்துக்கு அவரிடம் கணக்கு இல்லை. இதைத்தொடர்ந்து கணக்கில் வராத ரூ.35 ஆயிரத்தையும் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அதிகாரி பழனியம்மாளை கைது செய்தனர். பின்னர் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.