பொன்னமராவதி அருகே பரிதாபம்: மலைத்தேனீக்கள் கொட்டியதில் கோவில் பூசாரி பலி …

719

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செவ்வூர் பகுதியை சேர்ந்தவர் சிவா (60). இவர் சோனையன் கோவில் பூசாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று காலை 9. 30 மணியளவில் பூலாங்குறிச்சி- செவ்வூர் செல்லும் சாலையில் சிவா தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது கூட்டமாக வந்த மலைத்தேனீக்கள் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டின.

இதில் கோவில் பூசாரி சிவா, சுள்ளாப்பட்டியை சேர்ந்த சுப்பையா (70), கணபதி (65), செவ்வூரை சேர்ந்த பலாங்கனி (40), கல்லூரி மாணவ-மாணவிகளான பூலாங்குறிச்சியை சேர்ந்த ராஜ்குமார் (18), யோகபிரியா (17), காயத்திரி (21), செவ்வூரை சேர்ந்த அடைக்கப்பன் (15), புதுக்கோட்டையை சேர்ந்த அபிநயா (18), ராதா (18), ஜெயந்தி (19) உள்பட 17 பேருக்கு முகம் மற்றும் பல்வேறு இடங்களில் வீக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். மேலும், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த 19 பேரையும் அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் காரில் கொண்டு சென்று பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், 108 ஆம்புலன்ஸ் மூலமாக பொன்னமராவதி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதில், தேனீக்கள் கொட்டியதில் கோவில் பூசாரி சிவா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வலையபட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பூலாங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.