திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: மூன்று பேர் பலி

933

திருச்சி மாத்தூர் அருகே இந்த கார் விபத்து நடைபெற்றுள்ளது. சேலத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற காரும், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக மாத்தூர் வந்த காரும் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக் கொண்டன.

இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒன்பது பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். காவல்துறையினர் மேற்கொண்ட உடனடி விசாரணையில் இறந்தவர்களின் பெயர் விவரம் தெரியவந்துள்ளது.

மகிஷா ஸ்ரீ (12), சுமதி (45), டிரைவர் கதிர் (47) ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். இந்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார் படுகாயம் அடைந்த 9 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் 3 பேர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை விபத்தால் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் விபத்து நடந்த இடத்தில் குவிந்தனர். இருவழி சாலையாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன இதை நான்கு வழி சாலையாக மாற்றம் பெற்றால் மட்டுமே விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது..