மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன்  சுந்தர பாண்டியன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

2342



புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலுள்ள, சிவகங்கை மாவட்டம், சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா. இளங்கோவன் அளித்த தகவலையடுத்து,  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும்,  தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ. மணிகண்டன் தலைமயிலான குழுவினர் மதுரையை மீட்ட   சுந்தரபாண்டியனின்  ஆறாம்  ஆட்சியாண்டு கல்வெட்டை  கண்டுபிடித்துள்ளனர். 

இந்தக்கல்வெட்டு குறித்து  ஆ. மணிகண்டன் கூறியதாவது , 

கல்வெட்டு அமைவிடம் :
புதுக்கோட்டை மாவட்ட எல்லையில்,   சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டம், கொடுவூர் ஊராட்சி சானாவயல் பெருமாள்  மேட்டில், உடைந்த பலகை கல்வெட்டு  நான்கரை அடி உயரத்துடனும், ஒன்றே முக்கால் அடி அகலத்துடனும், மூன்று புறங்களில்   114 வரிகளுடன் உள்ளது, இவற்றில் 103 வரிகள் தெளிவாக உள்ளது , கல்வெட்டின் இறுதிப்பகுதி முழுவதுமாக சிதைந்த நிலையில் ஸ்ரீ மாஹேஸ்வரர்  ரக்ஷை என்று முற்றுப்பெற்றுள்ளது. 

கல்வெட்டின் காலமும் செய்தியும் :
சோழர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மாறவர்மன் திருபுவன சக்கரவர்த்தியான  முதலாம்  சுந்தரபாண்டியனின் ஆறாவது ஆட்சியாண்டில் (பொ. ஆ.1222)  தை மாதம் தாழையூர் நாட்டு, சிற்றானூர்,  திருத் திருத்தெங்கூர் உடையார் திருநாகீஸ்வரமுடைய நாயனார் கோவிலுக்காக,  ஸ்ரீ கோயில் ஸ்ரீ ருத்ர, ஸ்ரீ மாகேஸ்வரர்கள், படிகாரியஞ் செய்வோர்கள் உள்ளிட்ட  அனைவரும்    செம்பொன்மாரி அரசு மாளவ மாணிக்கம், திருக்கான பேருடையாரான, உடையார் மாளவ சக்கரவத்திகளிடம் பக்கல் விலைகொண்டு, கோவிலுக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட நித்த நிவந்தங்களுக்காக   காணி நிலத்தை,  மிழலை கூற்றத்து வட பாம்பாற்று கலிதாங்கி மங்கலத்துப் பொன்பற்றி உடையான் சேந்தனுய்ய  வந்தான் செம்பியன் பல்லவரயர் என்பார்  பெயரில்  பிடிபாடு பண்ணிக்கொடுத்த செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது. 

வரிநீக்கமும் கடமை கொள்ளும் அளவும் :
இந்நிலத்திற்கு  தாழையூர் நாட்டு சிற்றானுர் கடமையந்தராயமும் மற்றும் எப்பேற் பட்ட விநியோகங்களும், நீக்கம் செய்த தகவலையும் , குறுவை நெல் நட்ட நிலத்திற்கு, கண்ணழிவு நீக்கி ஒன்று பாதி கடமை கொள்வதெனவும், தினை,  வரகு  நட்ட நிலத்தில் கண்ணழிவு  நீக்கி ஒன்றிலே கால்  கடமை கொள்வதாக அறிவிக்கப்பட்டமையை இக்கல்வெட்டு தகவல் பகிர்கிறது. 

கல்வெட்டில்  ஒப்பமிட்டவர்கள் :
கோப்பலை பட்டன் திருநாஹீஸ்வரமுடையான் , மும்முடி சோழன் ஐய்ய நம்பி  , திருவேகம்பந் கூத்தாடி கொற்றபட்டநனாந திருஞாநசம்பந்தப்பட்டந், ஆழித்தேர்  வித்தகந் , பொந்மா மாளிகைய பிள்ளை , சிகாரியம் சுந்தரப்பெருமாள், கோயிற்கணக்க நாகதேவந்,  ஸ்ரீமாளவச்சக்கரவத்திகள், கோயிற் தளத்தார்(தேவரடியார்)  ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர். 


கல்வெட்டு கூறும் ஊர்களின் பெயர் மாற்றம்  :
மிழலை கூற்றத்தில், தாழையூர் நாடு தற்போது தாழனூர் என்றும் ,  சிற்றானுர் சிறுகனூர் என்றும்,  கலிதாங்கி மங்கலம் , கதிராமங்கலம் என்றும் ,   பொன்பற்றி பொன்பேத்தி என்றும், மாறியுள்ளதையும் செம்பொன்மாரி, திருத்தெங்கூர் அதே பெயருடனும் அழைக்கப்படுவதையும்  அறிய முடிகிறது.

செம்பொன்மாரி :
பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் செம்பொன்மாரியில் சோழரை (பொ. ஆ. 1219) மூன்றாவது ஆட்சியாண்டில் வென்றதாக இலங்கை வரலாறு கூறுகிறது. இவ்வரலாற்று தகவலுக்கு இக்கல்வெட்டு வலு சேர்க்கிறது. மிக முக்கிய  அரசியல் அதிகாரம் பெற்றவராக அலுவலராக இருந்த செம்பொன்மாரி அரசு மாளவ மாணிக்கம், திருக்கான பேருடையாரான, . மாளவ சக்கரவத்திகள் என்பாரிடம்  நிலம்  பெறப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது.  . 

பொன்பற்றி காவலன் சேந்தன் :
வீர ராசேந்திர சோழர்  ஆட்சிக்காலத்தில்  பொன்பற்றி (பொன்பேத்தி)  எனும் நகரில்  புத்த மித்திரன் என்பார் ஐந்திலக்கண நூலெழுதி  அதற்கு வீர சோழியம்  என்று பெயரிட்டார்.  இந்நூலிற்கு உரை எழுதிய பெருந்தேவனார் புத்த மித்திரரின் மாணவராவார் ,  தமது உரையில்,  புத்தமித்திரரின் முன்னோர்களில் ஒருவனான,  பொன்பற்றி (பொன்பேத்தி) காவலன்  சேந்தன் என்பான், தொண்டைமானின் படைத்தலைவனாக இருந்து , சிங்களத்து அரையன், வில்லவன் ஆகியோரை வென்ற செய்தியை குறிப்பிடுகிறார்.  “பொன்பற்றி உடையான் சேந்தனுய்ய  வந்தான் ”  செம்பியன் பல்லவரயர் என்பார், பொன்பற்றி காவலன் சேந்தன் வழி வந்தவரென  இக்கல்வெட்டு சான்று பகிர்கிறது.   
மிக முக்கிய வரலாற்று தகவல்களை கொண்டுள்ள இக்கல்வெட்டு வரலாற்று ஆய்வுகளுக்கு  சான்றாக இருக்கும்  என்றார்.  ஆய்வின் போது  மா. இளங்கோவன் , ச.சாகுல் ஹமீது , அ. தளபதி அஸ்வின் ஆகியோர் உடனிருந்தனர்.