கொன்னையூர்
அருள்மிகுமுத்துமாரியம்மன்திருக்கோவில்
பங்குனித் திருவிழா

243

கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வரலாறு

மூலவர் : மாரியம்மன்

தலவிருட்சம் : நெல்லிமரம்

ஊர் : கொன்னையூர்

மாவட்டம் : புதுக்கோட்டை

ஸ்தல_வரலாறு :

முன்னொருகாலத்தில் இந்தப்பகுதி கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்தது. யாதவ இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், அதிகாலையில் எழுந்து, பால்கறந்து, தலையில் தூக்கி சென்றுஊருக்குள் சென்று விற்று வருவது வழக்கம். அந்தக் காலகட்டத்தில், ஊர்மக்களை பல விசித்திரமான நோய்கள் தாக்கின; இதனால், நிலத்தில் வேலை செய்ய ஆளே இல்லாமல் போனது. விதைத்தவை எல்லாம், நீர்பாய்ச்ச ஆளின்றி, வாடின; கருகின. மழையும் தப்பிவிட… குடிப்பதற்குக் கூட தண்ணீர் கஷ்டம் எனும் அளவுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள். மக்கள் அனைவரும்உலகாளும் நாயகியை வேண்டினர்.

அவர்களின் நோய்கள்யாவும் குணமாக வேண்டும்; மனமெல்லாம் குளிர்ந்து பூரிக்க வேண்டும்; பூமி செழித்து, அனைவருக்கும் வயிறார உணவு கிடைக்க வேண்டும் என யோசித்தவள், பூமிக்குள் புகுந்து கொண்டாள். பாலை எடுத்துக் கொண்டு, வழக்கம் போல் அந்தப் பெரியவர் வரும் போது, கொன்றை மரத்தின் வேர்களில் அவரது கால்கள் பட தடுமாறினார். பால் மொத்தமும் கொட்டியது. மண்ணெல்லாம் பாலாயிற்று. எத்தனை கவனமாக நடந்து போனாலும், இப்படித் தடுமாறுவதும், பால் கீழேமண்ணில் கொட்டி வீணாவதும் தினமும் தொடர்ந்தது. பெரியவர் கவலையானார். ஒருநாள், கோடரியால் அந்தக் கொன்றைமரத்தின் வேரை வெட்டினார். அங்கிருந்து ரத்தமும் பாலுமாக வெளிப்பட, அதிர்ந்து போனார் பெரியவர். விஷயம் தெரிந்து, ஊரே கூடியது. இன்னும் இன்னும் தோண்டிப்பார்க்க…. அழகிய விக்கிரகத் திருமேனியில் வெளிப்பட்டாள்,

தேவி பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்து, மேடான பகுதியில் வைத்தது தான் தாமதம்… உடலையே துளைத் தெடுப்பது போல் பெய்தது, கனமழை கிணறுகளும் குளங்களும் ஊரணிகளும் நிரம்பின; பிறகு வரப்பு வழியே, வாய்க்கால் வழியே வயல்களுக்கு சென்று, விதைகளை குளிரச் செய்தன. தேகத்தைத் துளைத்த மழையால், மக்களின் தோல் நோய்கள்யாவும் நீங்கின.

கோயில்சிறப்புகள் :

  • இங்கு ஊர் மக்கள் ஓலைக் குடிசை அமைத்து, அங்கே அம்மனை வைத்து வழிபடத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஊரில் இருந்து காட்டுக்கு நடந்து வந்து, அம்மனை வணங்கியவர்கள் பிறகு காட்டையே ஊராக்கி குடி புகுந்தனர்.
  • கொன்றை மரங்கள் அடர்ந்த வனம், கொன்றையூர் என்றானது; பின்னாளில் அது, கொன்னையூர் என மருவியது. அதே போல், ஓலைக் குடிசையாக இருந்த ஆலயமும் மிகப்பிரமாண்டமான கோயிலாகத் திருப்பணி செய்யப்பட்டது. அன்று தொடங்கி இன்றளவும் கொன்றையூர் மாரியம்மன் தான், இந்தப் பகுதி மக்களுக்கு விருப்பத் தெய்வம், கண்கண்ட தெய்வம், குல தெய்வம் எல்லாமே!
  • குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள நெல்லி மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுவது சிறப்பு.
  • பக்தர்கள் தாங்கள் நினைத்தது நிறைவேறியதும் கண்மலர், உருவ பொம்மை, உப்பு, மிளகு, அமோகமாக விளைந்த நெல் என நேர்த்திக் கடனை செலுத்தி, வணங்குகின்றனர்.
  • ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திங்கள் முதல் ஞாயிற்றுக் கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறும் அதில் கொன்னையூரைச் சுற்றியுள்ள சுமார் 60 கிராமங்களிலிருந்து மின்னலங்கார பல்லக்குகளில் வாணவேடிக்கையுடன் புஷ்ப பவனியுடன் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் பால் குடங்களுடன் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக் கடனையும், அதைத் தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டங்களில் பக்தர்கள் இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
  • உடலில் சகதி பூசி இக்கோயில் அம்மனை வழிபட்டால் வேண்டுதல் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • அம்மனின் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா பங்குனி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, கோலாகலமாக நடைபெறுகிறது. மறுநாள், அக்னிக் காவடி வழிபாடு. 2 ஆவது ஞாயிற்றுக் கிழமையில் காப்புக்கட்டி, மறுநாளில் இருந்து நடைபெறுகிறது 15 நாள் மண்டகப்படி. இந்த 15 நாட்களும் தினமும் பால் திருமுழுக்கு, மாவிளக்கேற்றுதல், பொன்னமராவதி, செவனூர், ஆலவயல் மற்றும் செம்பூதி என நான்கு நாட்டை சேர்ந்தவர்களும் திரளாக வந்து அம்மனை தரிசித்தல், வெள்ளி ரதத்தில் அம்மன் வீதியுலா எனக் கொன்னையூர் முழுவதும் விழா மகிழ்ச்சியை காணலாம்.

திருவிழா :

ஆடி அமாவாசை, பங்குனி திருவிழா, தமிழ் மாதப்பிறப்பு

முகவரி:

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
கொன்னையூர்,
புதுக்கோட்டை.

அமைவிடம் :

கொன்னையூர் முத்துமாரியம்மன் தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகில் உள்ள கிராமம் கொன்னையூர். இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் பொன்னமராவதியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது இவ்வூர். ஊரின் மையப் பகுதியில் கோயில் கொண்டு, காத்து வருகிறாள் முத்து மாரியம்மன்….!

#கொன்னையூர்
#அருள்மிகு_முத்துமாரியம்மன்_திருக்கோவில்
பங்குனித் திருவிழா 2023 🙏🏻🙏🏻🙏🏻

19-03-2023 பூச்சொரிதல் விழா
20-03-2023 அக்னிக் காவடி
09-04-2023 பொங்கல் விழா
10-04-2023 நாடு செலுத்தல்

அனைவரும் வருக!
அன்னையின் அருள் பெறுக!!

ஓம் சக்தி 🙏🏻🔱🔥