புதுக்கோட்டை அருகே திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி இன்று 13 ந்தேதி திங்கள்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அது போல் நிகழாண்டில் பிப்ரவரி 26 2.2023-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும் அதனைத் தொடர்ந்து 5 3 2.2023 – ஞாயிறு இரவு கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசிப்பெருந்திருவிழா 16 நாள்கள் நடைபெறுகிறது. வருகின்ற 20.3.2023 -ஆம் தேதி திருவிழா நிறைவடைகிறது.விழாவின் தொடக்க நாளில், திருவப்பூர் குலாலர் தெருவின் திடலிலிருந்து நாட்டார்கள், ஊரார்கள் தங்கள் கிராம தெய்வமான கவிநாடு களரி பெரிய அய்யனார் கோயிலுக்கு புரவி எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகம், வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து இரவு ஏழு மணி அளவில் திருக்கோகர்ணம் அருள்மிகு திருக்கோகர்ணேசர் உடனுறை பிரஹதாம்பாள் ஆலயத்தில் உற்சவ மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக எடு்த்துச்சென்று திருவப்பூர் கோயிலை அடைந்த அம்மனுக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது.இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை(பிப்.5) இரவு 9.30 மணியளவில் கொடியேற்றப்பட்டு மாசிப்பெருந்திருவிழா தொடங்கியது.
திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் அன்னவாகனம், ரிஷபவாகனம், சிம்மவாகனம், குதிரை வாகனம், முத்துபல்லக்கு போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது. விழாவி்ன் முக்கிய நிகழ்வாக (மார்ச்-13) திங்கள்கிழமை பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
தேரோட்டத்தையொட்டி புதுகோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள், அலகு குத்திச்சென்று தங்கள் நேர்த்திக்கடனை நி்றைவேற்றி அம்மனை வழிபட்டனர்