திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே அமைந்துள்ளது “சிவன்மலை” அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோவில்…
இங்கே வைக்கப்பட்டுள்ள “ஆண்டவர் உத்திரவு பெட்டி” யில் அவ்வப்போது உத்தரவு பொருட்கள் வைத்து பூஜிக்கப்படுவது வழக்கம்….
பக்தர்கள் கனவில் வந்து உத்தரவு ஆகும் பொருட்களை கொண்டு வந்து கோவில் நிர்வாகத்திடம் கொடுப்பார்கள்…அதை ஆண்டவர் சன்னிதானத்தில் உத்தரவு கேட்ட பறகு பூஜிக்கப்பட்டு பெட்டியில் காட்சிக்கு வைக்கப்படுவது வழக்கம்…
அவ்வாறு கடந்த காலங்களில் இதுவரை வைக்கப்பட்ட பொருட்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது…
அதுபோல சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில்
இன்று முதல் (27/02/23) வேல் வைத்து பூஜை ஆகிறது…
*சித்தர் எழுப்பிய சிவன் மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்*
சிவன்மலை சுப்பிரமணியர் கோயில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோயில் ஆகும்.
காங்கயத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் சிவன்மலை மீது அமைந்துள்ளது.
சிவன்மலை மீதுள்ள கோயிலை நடைப்பயணமாக அடைய 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் மூலம் கோயிலுக்குச் செல்ல தனிப்பாதை உள்ளது.
கோயில் நிர்வாகத்தாரால் மலை மீதுள்ள கோயிலுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் வாகனங்களிலும் செல்லலாம்.
சிவவாக்கியம் எனும் நூலை இயற்றிய சிவவாக்கியர் சித்தர் சிவன் மலையில் தங்கி தமது விருப்பதெய்வமான முருகப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார்.
அவர் பெயரிலேயே மலை ’சிவன் மலை’ என்று வழங்கப்பட்டது.
சிவன்மலை கோயிலுக்கு வெளியே தீபத்தூண் உள்ளது. அத் தூணின் அடிப்புறத்தில், விநாயகர் (கிழக்கே), சூலம் (தெற்கே), மயில் ((வடக்கே) மற்றும் தண்டபாணி (மேற்கே) வடிக்கப்பட்டுள்ளது.
கோயிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் கைலாசநாதர், ஞானாம்பிகை சன்னிதிகள் கிழக்கு முகமாக உள்ளன.
மேற்கு பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கன்னிமூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும், கருவறையின் வெளிச்சுவற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
சனிபகவானுக்குத் தனி சன்னிதியும் அதுதவிர நவக்கிரக சன்னிதியும் அடுத்து பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன.
பிரகாரம் சுற்றிவந்து, கொடிமரம், மயில்வாகனக் குறடு, பலிபீடம் கடந்தால், சுமுகர், சதேகர் துவாரபாலகர்கள்.
அடுத்து உள்ளே கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி சமேதராக இருக்கிறார்.
சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.
இது பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம் முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு குடிகொண்டதாகவும் வரலாறு உள்ளது.
உத்தரவுப் பெட்டி :
இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவின் பெயரில், ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.
பூசைக்குப் பின்னர், அப் பொருள் ’உத்தரவுப் பெட்டி’ என்றழைக்கப்படும் கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப் பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார்.
அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர்அப் பொருள் கடவுளின் முன் வைத்துப் பூஜை செய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படுகிறது.
வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது.
நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிவன்மலையில் இன்றும் ஏராளம் சித்தர்கள் தவம் செய்து கொண்டிருக்கின்றனர்.
புண்ணியம் செய்தோர் கண்களில் அவ்வப்போது சில சித்தர்கள் புலப்படுவதுண்டு.
இத்தல முருகரின் பக்தையான ஒரு பெண் காசி சென்று நீராட விரும்பியும் காசி செல்ல வசதியில்லாததால் மனம் வருந்த,
தம் பக்தைக்காக முருகப்பெருமான் காசித் தீர்த்தத்தை இத்தலத்திற்கே வரவழைத்தார்.
மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப் பெருமானுக்கே.
மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே.
நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன.
ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் சன்னதியும் உள்ளது.
சிவபெருமான், உமையம்மைக்கும் நவகன்னியருக்கும் தரிசனம் தந்தருளியதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது.
மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார்.
காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.