உலகின் பழைய மொழிகள் ஏழு. அவற்றில் இப்போது வரை வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். ஒன்று தமிழ்.
இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.
இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன. இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது. திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந்தியது. ஆனால், அதில் உள்ள சொற்களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். உதாரணம்: ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு‘ ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்‘
தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன. கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத்தில் பத்து கோடி, நூறு கோடி என்றுதான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).
தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுலவெபில் கூறியுள்ளார்.
வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்)
ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த வல்லினம், மி மெல்லினம், ழ் இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
திருமூலர் இறைவனைப் போற்றும் போது ” முத்தமிழாகவும் விளங்குகிறான் ” எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன், தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுகின்றார்.
“முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே “- திருமந்திரம்.
வேறு ஒரு பாடலில் திருமந்திரப் பாடலில் சாத்திரத்தை தமிழில் படைக்கும் அருளைக் கூட்டிப் பாடச் செய்த பெருங் கருணையைப் பாடி பரவுகிறார்.
:”என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே…”
இவ்வரிகளில் தமிழில் பாடும் அருள் கிட்டியதன் பெருமை தொக்கி நிற்பதைக் காணலாம்.
” அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் ”
ஞானவெட்டியான்
“பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே ”
” சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல்
காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும்
தேவியென்னும் பூரணியே சீர்
-அகஸ்தியர் ஞானம் 100
பொதிகை மேவு மகத்தீர ராலெனது
போத இத்தமிழ் வாக்கியம் – ஞான வெட்டியான் 1500
கருத்து விளக்கத்திற்காகப் பயன் படுத்தப்படும் உவமை இலக்கிய சுவைக்கு மெருகூட்டுவது கும். சித்தர் பாடல்களில் கணக்கற்ற உவமைகள் காணப்படுகின்றன.
வள்ளலார் தமிழை பித்ரு மொழியாக கருதுகிறார். இறைவன் தன்னை தமிழால் வளர்க்கின்றார் என்பதை “மெய்யடியார் சபை நடுவே எந்தை உனைப்பாடி மகிழ்ந்தின்புறவே வைத்தருளிச் செந்தமிழின் வளர்க்கின்றாய் ( 4802)
மேலும்,
வடிக்குறும் தமிழ்க்கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே- 875 என இறைவனை ப்போற்றி துதிக்கின்றார்.
சாகாகலை தந்தது- தமிழ் மொழி
ஆரவாரமில்லா மொழி- தமிழ் மொழி
தமிழ் உச்சரிப்பு சாகாகலைக்கு முக்கிய பங்காகும் என வள்ளலார் கூறுகின்றார்.
இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.
தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
– ஞா.தேவநேயப் பாவாணர்
உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.
அக்கால மக்கள் வீர வாழ்க்கையையும் கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் மலையளவு அறநூல்கள் உள்ளன. ஆழ்ந்து அகன்று தேடினாலும் திருக்குறள் போல் வேறு மொழிகளில் அறநூலுண்டோ?.
மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன. வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.
‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ – பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல்
‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது.
தமிழின் சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள், வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல் திருக்குறள் மற்றும் உச்சரிப்பு இனிமை போன்ற கருத்துக்கள் தான்.
தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும்.
தமிழில் பகுபதம், பகாப்பதம் என இரண்டு வகை உண்டு. அவை பிரித்துப்பார்க்க வேண்டியவை, பிரித்துப்பார்க்க கூடாதவையாகும்.
உதாரணமாக கடவுள் (கட+ உள் ) என்ற சொல்லின் பொருள் எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன் என்பதல்ல. நீ ஆசைகளை ,பந்த பாசங்கள் எல்லாவற்றையும் கட உனக்குள் கடவுள் இருப்பான் என்பதாகும்.
1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்
2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்
3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்
4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்
5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்
6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்
7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)
8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது
9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)
10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.
11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் ‘எந்தமிழ்’ என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)
12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்
13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)
14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்
15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்
16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்
17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்
18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்
19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது
20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)
21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் – வளம் குன்றாத தமிழ்
22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்
23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் – குளிர்ச்சி நிறைந்தது
24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்
25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்
26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது
27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்
28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்
29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)
30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்
31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது
32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது
33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது
34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது
35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)
36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்
37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)
38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்
இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (metalinguistic) சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.
தமிழ் இலக்கணம் பெருவாரியாகத் தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும். பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.
தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, அஃறிணை என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும், பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பாலென மூன்று பால்களாகவும், அஃறிணை ஒன்றன்பால், பலவின் பாலென இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.
தமிழில் வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன.
இலக்கணம், சொல் வளம், எழுத்துக்கள் பற்றிய அருமைகளை தெரிந்து கொள்ள ஒரு புத்தக அளவு வேண்டும்..