சதம் முதல் சிக்சர் வரை.. ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த ரோகித் சர்மா

135

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், 84 பந்துகளில் 131 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இந்த போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி, உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். அதிக சதங்கள் அடித்திருந்த வீரர்களில் ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

இத்துடன் உலகக் கோப்பை தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த சாதனையை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.