தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது!

559

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 17 ஆடுகள் 5 செல்போன் 4 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கறம்பக்குடி போலீசார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு மேலாக பல்வேறு ஆடுகள் மர்ம நபர்களால் திருடு போய்வந்தன. இந்நிலையில் ஆடு திருடு போனதை தொடர்ந்து ஆட்டின் உரிமையாளர்கள் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில் ஆடுகள் திருடும் மர்ம நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில் கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் சுக்கிரன் விடுதி பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் நான்கு இரு சக்கர வாகனங்களில் ஆடுகளை ஏற்றி வந்த நபர்களை போலீசார் மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முரணாக பதில் அளிக்கவே உஷாரான போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். இதில் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆடு திருடும் கும்பல் என தெரிய வந்தது. ஆடுகளை திருடியவர்கள் கிருஷ்ணமூர்த்தி(18), சதீஷ்(17), தினேஷ்(24), பாரதிராஜா(20), ஆனந்தன் (21) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 17 ஆடுகள், 5 செல்போன்கள், நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆடு திருட்டில் ஈடுபட்டு தப்பிச்சென்ற அஜித் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

ஆடுகளை பறிகொடுத்த ஆட்டின் உரிமையாளர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவரது ஆடுகளை அடையாளம் கண்டறிந்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.