திருமயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் கல்குவாரிகளில் ஆர்டிஓ அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, ஹிட்டாச்சி உள்ளிட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்ய்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே துளையானூரில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் திடீரென அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, சட்ட விரோதமாக கல் எடுக்க பயன்படுத்தப்பட்ட, ஹிட்டாச்சி உள்ளிட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்ய்பட்டது.
திருமயம் பகுதியில் அனுமதி இன்றி கல் குவாரிகள் செயல்படுவதாக புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருமயம் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் நள்ளிரவில் கோட்டாட்சியர் முருகேசன் ஆய்வு செய்தார். அப்போது, திருமயம் அருகே துளையானூரில் உள்ள ஒரு கல் குவரியில் சட்ட விரோதமாக கல் எடுத்து கொண்டிருந்தனர் . பின்னர், இந்த ஆய்வில் கல் எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஹிட்டாச்சி வாகனம் மற்றும் 2 பெரிய டாரஸ் லாரிகளை அவர் பறிமுதல் செய்தார்.
வருவாய் கோட்டாட்சியரின் நள்ளிரவு ஆய்வை தொடர்ந்து, அங்கிருந்த நபர்கள் தப்பி ஓடினர். இந்த சூழலில் இதுகுறித்து வருவாய்த் துறையினர் அளித்த புகார் அடிப்படையில் திருமயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் யாருக்கு சொந்தமானவை என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர், மேலும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்குவாரிகளில் கோட்டாட்சியர் முருகேசன் மேற்கொண்ட இந்த ஆய்வு, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.