அறந்தாங்கி அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது,40 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு.
அறந்தாங்கி அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்!
நாள்: 08.09.2022 வியாழக்கிழமை.
அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக திகழ்வது, #புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, #அறந்தாங்கி ஸ்ரீ #வீரமாகாளி அம்மன் ஆலயம்.
பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட அம்மன், திருமண வேண்டுதலுக்குப் பொட்டுதாலி காணிக்கை பெறும் ஆலயம், அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வம், முப்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.
தல வரலாறு:
இவ்வாலயம் அருகேயுள்ள மூக்குடி கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறாள், இந்த வீரமாகாளி அம்மன்.
சிறிய கல் வடிவில் சுயம்புவாகத் தோன்றிய வீரமாகாளிக்கு, சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவுருவச் சிலை செய்யும் எண்ணம் கிராம மக்களுக்கு ஏற்பட்டது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால், அந்தச் சிலையின் வலது மேல் கரத்தில் ஒரு விரலில், பின்னம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர்.
அன்றைய தினம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருகிறேன். நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது. நான் இருக்க இன்னொரு வடிவம் தேவையா?. என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விடுங்கள். அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டுங்கள். என் வடிவம் கிடைக்கும்’ என்று கூறியதும் அர்ச்சகர் கனவு கலைந்து எழுந்தார்.
தன்னுடைய கனவைப் பற்றி ஊர் மக்களிடம் கூறினார். அனைவரும் அவ்வாறே ஆட்டை நடக்கவிட்டனர். அது ஓரிடம் சென்று அமர்ந்தது. அங்கே மண்ணைத் தோண்டியபோது, சில அடி ஆழத்தில் அம்மனின் பிரம்மாண்ட கற்சிலை கிடைத்தது. அந்தசிலை எண் கரங்கள் கொண்டு, அசுரனை அழுத்திய கோலத்தில் இருந்தது. அதில் ஒரு அதிசயம் தென்பட்டது. அதன் வலது மேல்கரத்தில் ஒருவிரல் பின்னப்பட்டு இருந்தது.
எனவே ஊர் மக்களுக்கு இதை வைத்து வழிபாடு செய்யலாமா? என்ற ஐயம் ஏற்பட்டது.
அதன்பின் அன்றிரவும் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அன்னை, ‘உங்கள் வீட்டில் ஒருவருக்கு ஊனம் என்றால், அவரை தூக்கி வீசிவிடுவீர்களா? நான் உங்களைக் காக்க வந்த அன்னை. என்னை தயக்கம் இன்றி நிறுவி வழிபடுங்கள்’ என்றாள்.
இதையடுத்து அந்த பிரம்மாண்ட சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்ய ஊர் மக்கள் முடிவு செய்தனர். அன்று முதல் இன்று வரை அந்த அன்னையே ஊர் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள்.
ஆலய அமைப்பு:
ஆலயம் வடக்கு நோக்கிய வாசலைக் கொண்டு அமைந்துள்ளது. எளிய முன் முகப்பு மண்டபத்தின் வலதுபுறம், கருப்பசாமி மற்றும் விநாயகர் சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. கருவறை வாசலில் கல்லால் வடிக்கப்பட்ட பெரிய வடிவ துவாரபாலகியர்கள் காவல்புரிகின்றனர்.
கருவறையின் இடதுபுற முகப்பில் பழங்கால விநாயகர், பெருச்சாளி வாகனம் உள்ளிட்ட சிறிய வடிவிலான தெய்வ சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. முதல் மரியாதை இவர்களுக்கே. இதைக் கடந்ததும், கருவறையின் உள்ளே அன்னை வீரமாகாளி எழிலான கோலத்தில், பிரம்மாண்ட வடிவில் கருணை வடிவாக அருள்காட்சி வழங்குகிறாள்.
வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், சிரசில் மகுடம் தாங்கி, வலது காதில் ஆணுக்குரிய நாகாபரணமும், இடது காதில் பெண்ணுக்குரிய பாம்படம் எனும் காதணியும் அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை, எண்கரங்களோடு காட்சியளிக்கிறாள். வலதுபுறம் சூலம், வாள், உடுக்கை, வேதாளம் கொண்டும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, வரதம் தாங்கியும் காட்சிதருகின்றாள். காளிக்குரிய கபாலம் அன்னையின் கரத்தில் காணப்படாதது குறிப்பிடத்தக்கது.
வலதுகாலை மடக்கி, இடது காலை அசுரனின் தலையை அழுத்தியும், சூலத்தால் குத்தியும் காட்சி அளிக்கின்றாள். அன்னையின் முகத்தில் சிறிய கோரைப்பற்கள் காட்சி தந்தாலும், அன்னை சாந்த சொரூபியாக காட்சி தருவது அபூர்வக் கோலமாகும்.
இந்த அம்மன் திருமணத்தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தலை சிறந்த தலமாக வீரமாகாளி திகழ்கிறாள்.
வரம் வேண்டுவோர் அம்மனை நேரில்வந்து அல்லது ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ள வேண்டும். விரைவில் திருமணம் கைகூடும். திருமணம் நிச்சயமான பிறகு அல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவுசெய்து கொள்ள வேண்டும்.
இதேபோல, நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை வழிகாட்டுகிறாள். நேர்த்திக் கடன் செலுத்திய குழந்தை மண் பொம்மைகள் இங்கே குவிந்துள்ளதே இதற்கு சாட்சியாகும். குழந்தை வரம் நிறைவேறியவர்கள், அந்தக் குழந்தையைக் தத்துக் கொடுத்து, மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர்.
நடை திறப்பு:
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் தரிசனம் செய்யலாம்.
அமைவிடம்:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 33 கி.மீ., திருச்சிராப்பள்ளியில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே அரை கி.மீ. தொலைவிலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
திருவிழா:
ஆனி மாதம் கடைசி செவ்வாய் கிழமை காப்பு கட்டி பூச்செரிதலுடனும் ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமை திருவிழா தொடங்குகிறது. முப்பது நாட்கள் முப்பது சமூகத்தினர்கள் குறைந்தது 5000 முதல் 10000 பேருக்கு வரை அன்னதானத்தோடு கலை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.இங்கு சிறப்பு என்னவென்றால் இரண்டு நாள் தேரோட்டம் ஒன்பதாம் நாளும் பத்தாவது நாளும். இதில் இன்னும் சிறப்பு தேர் கோவிலை வலம் வருவதற்கு பதில் பள்ளி வாசலை வலம் வரும்.
மூக்குடி, பஞ்சாத்தி, இடையார், ஆலங்குடி , மாகாணத்தார்களால் பராமரிக்கப்படுகிறது.மேலும் அறந்தாங்கி பூவற்றக்குடி செட்டியார்களாலும் ஆலய மேம்பாட்டு பணிகளாலும் பலிச்சிடுகிறது இத்தலம்.