ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியே விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை (31.8.2022) கொண்டாடுகிறோம். இந்த நாளில் நாள் முழுவதுமே விநாயகரை வழிபடலாம் .
“ ஒவ்வோர் ஆண்டும் வரும் விநாயகர் சதுர்த்தி என்பது மிகவும் அற்புதமான தினம். இந்த நாளில் நாம் விக்னேஸ்வரனை வழிபாடு செய்ய வேண்டும். நம் விக்னங்கள் எல்லாம் விலக வேண்டும் என்று வேண்டிப் பூஜை செய்ய வேண்டிய நாள்.
அப்படி நாம் பூஜிக்கும் போது நம் வினைகளை எல்லாம் அகற்றி நல்லருள் தருவார் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விக்னேஸ்வரன் அவதரித்த நாளாகக் கருதப்படும் விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நாள் முழுவதுமே பூஜை செய்து வழிபட உகந்ததுதான். என்றாலும் ராகு காலம், எம கண்டம் இல்லாத நேரமாகப் பார்த்து பூஜை செய்து வழிபடுவது சிறந்தது.
இன்று(31.8.2022) புதன்கிழமை. நம் துன்பங்களை தும்பிக்கையில் ஊதி ஒன்றுமில்லா மல் செய்துவிடுவார் கணபதி. வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்தாலும் கணபதியை வணங்கிட அவற்றை களைந்து இனிப்பாக மாற்றிவிடுவார் என்பதை உணர்த்துகிறது நாம் அவருக்கு படைக்கும் நிவேதனங்கள்.
மோதகத்தை கையில் ஏந்தியிருப்பார் விநாயகர். மெத்து மெத்தென்று வென்மையாக இருக்கும் மோதகம் உள்ளே பூரணம் இருக்கும். வெளிப்பகுதி வெள்ளையாக வும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கும் மோதகம் போல மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.
கரும்பு கடிப்பதற்கு கடினமானாலும் அதன் சுவை இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அதே போல அவல், பொரி படையலின் தத்துவம், அவை இரண்டும் ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.