காரைக்குடியில் பி.ஹெச்டி மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு – போலீசார் விசாரணை!

305

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்டி படித்து வந்த ஆராய்ச்சி மாணவர், தான் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்புராம். இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இதற்காக காரைக்குடி 100 அடி சாலையில் தனியே அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சுப்புராமின் அறைக்கதவு திறக்காமல் இருந்துள்ளது. மேலும், அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அறைக்கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது, மாணவர் சுப்புராஜ் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்புராஜ் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பல்கலைக்கழக ஆய்வு மாணவர் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.