அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா.

321

மூர்த்தி, தலம் தீர்த்தம் என்னும் முப்பெருமைகளுடன் பல அருளாளர்களால் பாடப்பெற்றது அருள்தரும் மட்டுவார் குழலம்மை உடனமர் அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலாகும், இத்தலம் ஒப்பற்ற குழந்தைப்பேறு சுகப்பிரசவ பிரார்த்தனைத் தலமாகும்.

இத்தலத்தில் விநாயகப்பெருமான் மலையின் மேல் உச்சி விநாயகராவும், மலையின் கீழ் மாணிக்க விநாயகராகவும் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார். ஓங்கார வடிவினனாகிய விநாயகப்பெருமான் முழுமுதற் கடவுள் ஆவார். பிரணவம் ஓங்காரம் இல்லாமல் எழுத்துக்கள் இல்லை. ஒங்காரத்தில் இருந்துதான் உலகம் தோன்றியது. விநாயகர் என்னும் சொல்லுக்கு தனக்கு மேல் தலைவர் இல்லாதவர் என்பது பொருள். கணங்களுக்கு தலைவர் ஆதலின் கணபதி எனப் பெயர்பெற்றார். வழிபடுவோரின் விக்கினங்களைப் போக்குபவர், ஆதலின் விக்னேஸ்வரர் என்று அழைக்கபெற்றார்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை பௌர்ணமி கழிந்த நான்காம் நாளன்று சதுர்த்தி திதி வருகிறது. இதை விநாயகருக்கு உகந்த நாளாகக் கொண்டாடுகிறோம். பௌர்ணமி முடிந்து நான்காம் நாளன்று வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என மாதந்தோறும் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை கழிந்த நான்காம் நாளன்று வரும் சதுர்த்தியை மஹா விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.

முற்காலத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன் கடுந்தவமியற்றி சிவபெருமானிடம் தன்னை மனிதர், விலங்கு, தேவர், ஆண், பெண், ஆயுதங்களால் கொல்ல முடியாத வரத்தைபெற்றான். வரத்தைப் பெற்றதும் அனைவரையும் துன்புறுத்தலானான். சிவபெருமான் ஆவணி மாத அமாவாசை கழிந்த நான்காம் நாள் சதுர்த்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் விநாயகப் பெருமானை தோற்றுவித்தார். விநாயகர் தன் கொம்புகளில் ஒன்றை ஒடித்து கஜமுகாசுரனை வென்று மூக்ஷிகத்தின் மீதேறி அமர்ந்து அதனை தனது வாகனமாக ஆக்கி அருள் புரிந்தார்.

இவ்வாறாக விநாயகப்பெருமான் கஜமுகாசுரைைனக் கொல்லும் பொருட்டு திருஅவதாரம் செய்த தினமான ஆவணி மாத பூர்வபட்ச சதுர்த்தி தினமே விநாயகர் சதுர்த்தி நாளாகும். இந்நாள் மகிமையும் கீர்த்தியும் வாய்ந்த நன்னாளாகும். புகழ்பெற்ற விநாயகர் 31.08.2022 முதல் 13.09.2022 முடிய சிறப்பாக நடைபெற இருக்கிறது. இறையன்பர்கள் கலந்துகொண்டு விநாயகப்பெருமானின் இரு அருள்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சீ.செல்வராஜ் M.A., B.L., இரா.ஹரிஹரசுப்பிரமணியன் B.Sc., B.L.,, தக்கார் / இணை ஆணையர் உதவி ஆணையர் / செயல் அலுவலர்