கருணையின் உருவமாக, சேவையின் உறைவிடமாக இன்றளவும் புகழப் படுபவர் அன்னை தெரசா. இன்று அவரது 112 வது பிறந்தநாள்.
அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவர் கடந்த 1910-ம் ஆண்டு அகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார். இவர் இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார்.
அடுத்தவருக்கு காட்டும் பரிவு ஆண்டவனுக்கு செய்யும் உதவி” என்கிறது வேதம். பிறர் கண்ணீரை தொட்டுத் துடைக்கிற விரல், ஆறுதல் தருகிற அன்பு, அரவணைக்கும் நேசம் இவையெல்லாம் உலகின் உன்னதங்கள். இந்த உன்னதங்கள் ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக நீளும்போது, வாழ்க்கை அர்த்தப்படுகிறது. இப்படிப்பட்ட அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர்கள் அற்புத மனிதர்களாக அறியப்படுகிறார்கள். அப்படி அன்பால் மனிதர்களை வசீகரித்து, இறந்தும் இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் புனிதர் அன்னை தெரசாவுக்கு இன்று பிறந்த நாள். இந்த பூமியையும் தன் அன்பால் வசப்படுத்திக்கொண்டது வாஞ்சை மிகுந்த அந்தத் தொண்டு தேவதை.
ஆதரவற்றவர்களின் தேவதை!
12 வயதில் முதன்முதலாக ஆன்மிக அழைப்பை உணர்ந்த அன்னை தெரசா, தனது 18 வயதில் கன்னிகா ஸ்திரீயாக மாறுவது என முடிவு செய்தார். இதற்காக வீட்டைவிட்டு வெளியேறி, ‘சகோதரி தெரசா’ என தன் பெயரை மாற்றிக்கொண்டார். 1923-ல் ‘சோடாலிட்டி ஆஃப் சில்ரன் ஆஃப் மேரி’ என்ற சமூக சேவை அமைப்பில் இணைந்தார்.
பின், 1929-ல் கொல்கத்தா வந்த அன்னை தெரசா, அங்கு ஒரு பள்ளியில் சுமார் 17 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1946-ல் ஏழைகளுக்கு உதவுவதற்காக கற்பித்தல் பணியிலிருந்து விலகிய அன்னை தெரசா, சேவை செய்வதற்காக செவிலியர் பணிக்கான மருத்துவப் பயிற்சி பெற்றார்.
1950-ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றினார்.
1952-ல் ‘நிர்மல் ஹ்ருதய்’ என்ற இல்லத்தைத் தொடங்கினார். கொல்கத்தா தெருக்களில் ஆதரவற்றுக் கிடந்த ஏராளமான தொழுநோயாளிகளை இங்கு கொண்டு வந்து பராமரித்தார். அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டார்.
முதலில் இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட அன்பின் பணியாளர் சபை, பின்னர் வெளிநாடுகளுக்கும் சென்றது.
சமூகசேவை, சகிப்புத்தன்மை மூலம் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. அதன் தொடர்ச்சியாக 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980-ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதும் அன்னை தெரசாவிற்குக் கிடைத்தது. இது மட்டுமின்றி ஜவஹர்லால் நேரு விருது, பாரத ரத்னா விருது, அமெரிக்க ஜனாதிபதி பதக்கம், பிலிப்பைன்சின் ரமன் மகசேசே விருது, ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் ஆர்டர் ஆஃப் மெரிட் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளையும் கவுரவங்களையும் அவர் பெற்றுள்ளார்.
அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற சேவைகளில் பங்காற்றி வருகிறது.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக மானுட சேவையில் ஈடுபட்டு வந்த அன்னை தெரசா 1997-ம் ஆண்டு 87-வது வயதில் மறைந்தார். இறப்புக்குப் பின் அவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.
ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லை, ஜாதி மத பேதமில்லை, நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவனையும் சக மனிதனாய் நினைத்து, எல்லோர் இடத்திலும் அன்பு செலுத்தியதால், “ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ” என்ற அல்பேனிய பெண்ணை, இந்திய மக்கள் தங்களின் அன்பின் வெளிப்பாடாக “அன்னை தெரசா” என்று அழைக்கத் தொடங்கினார்கள். உலகமே போற்றும் அன்பின் வடிவமான “அன்னை தெரசா” பிறந்த தினம் இன்று.