அமாவாசை விரதம்

236

ஆவணி மாதம் சுப மற்றும் தெய்வீக காரியங்கள் செய்வதற்கான சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் வீட்டில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

அமாவாசை என்பது ஒவ்வொரு மாதத்திலும் சூரியனின் மறைப்பால் நிகழ்வதாகும். அந்த அமாவாசை அன்று நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் இறைவனின் அனுகூலத்தைப் பெற முடியும். அத்தகைய அமாவாசை விரதத்தினை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அமாவாசை தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட வேண்டும். அதாவது அமாவாசையன்று வீட்டினை காலையில் எழுந்து சுத்தம் செய்தல் வேண்டும், மேலும் அமாவாசையினை சிலர் கெட்ட சக்திகள் உலவும் நாளாகக் கருதுவர். அதனால் ஒரு குவளையில் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து அந்த நீரை வீடு முழுவதும் தெளித்துவிட வேண்டும்.

மேலும் பூஜை அறையினை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள புகைப்படத்தை புதுத் துணியால் துடைக்கவும். அடுத்து மலரால் இறைவனின் புகைப்படத்தை அலங்கரிக்கவும். அடுத்து இறைவன் புகைப்படத்தின் முன் கற்பூரத்தை ஏற்றவும்.

தங்களின் விருப்பங்கள் நிறைவேற விரும்புபவர்கள், அமாவாசை நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து, தங்களின் குலதெய்வம், இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபடுவதால், எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

 அடுத்து அமாவாசை நாட்களில் அசைவ உணவுகள், பூண்டு போன்றவற்றினைத் தவிர்க்க வேண்டும். மேலும் காலையில் துவங்கி மாலை அமாவாசை முடியும் வரை விரதம் இருத்தல் வேண்டும். மேலும் நாள் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் இருந்து, பால், பழம் மற்றும் தண்ணீரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அமாவாசை முடிந்த பின்னர், ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தண்ணீரை பித்தளை செம்பில் வைத்துப் படைக்கவும். மேலும் படைத்த நீரை பூஜை அறை மற்றும் அனைத்து அறைகளிலும் தெளித்தல் வேண்டும்.

மேலும் மஞ்சள் தண்ணீர் தெளித்த பின்னர் சமைத்த உணவினை காக்கைக்கு வைக்க வேண்டும், காக்கை சாப்பிட்ட பின்னர் நம் விரதத்தை முடிக்க வேண்டும்.

அமாவாசை தினம் இந்த பூமியின் மீது ஒரு விஷேஷமான சக்தி நிறைந்திருக்கும். இத்தகைய தினத்தில் விரதம் இருந்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் நாம் விரும்பிய அனைத்தையும் நாம் பெற முடியும்.


நமது முன்னோர்கள், அமாவாசை தினத்தன்று நம்மை காண வருவார்கள் என்பது ஐதீகம். ஆகையால் அமாவாசை தினத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையலிட்டு வழிபடுவது போன்ற செயல்கள் மூலம் பித்ரு சாபம் நீங்கும். அதோடு முன்னோர்களின் பரிபூரண ஆசியும் நமக்கு கிடைக்கும். அமாவாசை தினத்தில் குலதெய்வத்திற்கு பூஜை செய்து படையலிட்டு வழிபட்டு வந்தால் குலதெய்வ சாபம் நீங்கும்.