புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டை பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயியான இவர், வாரிசு சான்றிதழுக்கான பரிந்துரை கடிதம் வழங்க வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியனை கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் அணுகினார். அப்போது பரிந்துரை கடிதம் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய பாலசுப்பிரமணியனை புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நான்கு ஆண்டு சிறை தண்டனை
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பாலசுப்பிரமணியனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்