தனியாக இருந்த பெண்களிடம் நகைகள் பணம் கொள்ளை..

820

புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 80 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக் கோட்டையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த ராம பிரபா மற்றும் அன்னம் ஆகிய இரண்டு பெண்களை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்து இருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மகும்பல் கொள்ளை அடித்து சென்றது.

இது தொடர்பாக வல்லத்ராகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று வல்லத்திரா கோட்டை காவல்துறையினர் புதுக்கோட்டை அறந்தாங்கி தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

மேலும் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் லட்சுமி நாராயணன் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது அவர்கள் வல்லத்திராக்கோட்டை பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்தியில் இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கூட்டாக இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரஞ்சித் மட்டும் லட்சுமி நாராயணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசாத் பாஷா, மணிகண்டன், ராஜலிங்கம், ரபீக் , பழனி, சபரி , கண்ணன், கோபி ஆகிய 10 பேர் இணைந்து தான் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது.

இதில் ராஜலிங்கம் மற்றும் ரபிக் ஆகியோர் பழனியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஞ்சித், லட்சுமி நாராயணன், ஆசாத் பாஷா, மணிகண்டன் ஆகிய நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் சபரி, கண்ணன் , கோபி, சங்கர், ஆகிய நான்கு பேரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நான்கு நபர்களிடமிருந்து 7 பவுன் தங்க நகைகள் இரண்டு இருசக்கர வாகனங்கள் நான்கு பட்டாகத்திகள் இரண்டு செல்போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் ஏற்கனவே இரண்டு பேர் சிறையில் உள்ள நிலையில் மீதமுள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர் அவர்களை கைது செய்யும் போது தான் மீதம் உள்ள நகைகள் கைப்பற்றப்படும் என்று காவல்துறை தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.