இன்று செல்வத்தை ஈர்க்கும் புதன்கிழமை பிரதோஷம்!

477

இன்று ஆகஸ்ட் 24-08-2022, சுபகிருது வருடம், ஆவணி 08, புதன்கிழமை, காலை 08.31 பின்பு தேய்பிறை திரியோதசி. பிரதோஷ விரதம். நாள் முழுவதும் சித்தயோகம்.

சிறப்பு : புதன்கிழமை பிரதோஷம்!

இன்று புதன்கிழமை பிரதோஷம்! புத்திசாலி பிள்ளைகள் பிறக்க சிவ தரிசனம் செய்யுங்க!

புதன்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது. இன்று மாலையில் சிவ ஆலயம் சென்று அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி இறைவனை தரிசிக்க வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். 16 வகை செல்வங்கள் கிடைக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சிவன் நந்தி அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித்தர நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி மளமளவென்று நடைபெறும்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும்.

செல்வம் என்பது பணம் மட்டுமல்ல… அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு தான் சிறந்த நாள்.

புதன்கிழமையில் இன்று பிரதோஷம் அமைந்துள்ளது. புதன்கிழமையில் பிரதோஷம் அமைந்திருப்பது நற்பலன்களைத் தந்தருளக்கூடியது.இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள்.

புதன் கிழமையில் வரும் பிரதோஷ விரதம் இருப்பவர்கள், செவ்வாய்கிழமை மாலையிலேயே நன்றாக குளித்து சிவ ஆலயத்திற்கு சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ சிவனை வழிபட்டு
‘ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்.
பின்னர் இரவு எளிய உணவு எடுத்து உறங்கிவிடுங்கள்.


புதன்கிழமை காலையில் எழுந்து குளித்து, அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு செருப்பு போடாமல் நடந்து சென்று சிவ பெருமானையும், நந்தி பகவானையும் வழிபட்டு, நான் புதன் கிழமை பிரதோஷ விரதம் இருக்கின்றேன், என் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை செல்வ தடைகளும் காணாமல் போக வேண்டும் என வேண்டி கோயிலில் அமர்ந்து 108 முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை கொடிமரத்திற்கு அருகில் அல்லது, தல விருச்சத்திற்கு அருகில் அல்லது நந்தி பகவானுக்கு அருகில் அமர்ந்து உச்சரிக்கவும்.


பிரதோஷ வேளையில் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள். நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை அணிவித்தால் தொழில் தடைகள் நீங்கும்.

சிவ வழிபாடு செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள்.
கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களை யெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.

பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். புதன் கிழமையன்று வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.