பிள்ளையார் பட்டி அருள்மிகு கற்பக வினாயகர் சதுர்த்தி திருவிழா இன்று 22.08.2022 திங்கட்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சதுர்த்திப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக.30 ல் தேரோட்டம், ஆக.31 ல் தீர்த்தவாரி நடைபெறும்.
இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இன்று காலை 9:30 மணிக்கு கொடிப்படத்துடன் சண்டிகேஸ்வரர் கோயில் வலம் வந்து கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து உற்ஸவ விநாயகர், அங்குசத்தேவரும் எழுந்தருளி பூஜைகள் நடந்தன. கோயில் தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தரம் குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவச்சார்யர்கள் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அறங்காவலர்கள் நா.கருப்பஞ்செட்டியார், சித. சுப்பிரமணியன் செட்டியார் முன்னிலையில் காலை 10:13 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்து, அலங்காரத் தீபாராதனை நடந்தது. மாலையில் மூர்த்தி, உற்ஸவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு காப்புக்கட்டி விழா துவங்கியது. நாளை முதல் தினசரி காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் 8:30 மணிக்கு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். ஆக.27 ல் கஜமுக சூரசம்ஹாரம், ஆக.30 ல் தேரோட்டம், ஆக.31 ல் தீர்த்தவாரியும் நடைபெறும்.
விநாயகர்சதுர்த்தி விரதம்
கற்பக விருட்சமாக காட்சி தரும் கற்பகவிநாயகர் (மூலவர்).
திசைமாறிக் காட்சியளிப்பது #பிள்ளையார்பட்டி யில் தான்.
நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வெற்றி பெற வேண்டுமானால் விக்னேஸ்வரரை வழிபட வேண்டும். ஆனைமுகப் பெருமான் ஆலயங்களில் மட்டுமல்லாமல் அரசமரம், ஆறு, குளங்களின் கரைகளிலும்.. இன்னும் சொல்லப்போனால் வீதிகள் தோறும் கூட வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அப்படிப்பட்ட விநாயகப்பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில் தான். இந்தப் பிள்ளையார்பட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ளது. பிள்ளையார் பெயரிலேயே உள்ள ஊர் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
இந்த ஆலயத்தில் வடக்குப் பார்த்து வீற்றிருந்து கற்பக விநாயகராக காட்சியளிக்கின்றார். எனவே, தான் வரத்தை அள்ளி, அள்ளித் தருகின்றார். ஆனைமுகப் பெருமான் கற்பக விநாயகராக பிள்ளையார்பட்டியில் காட்சிதருவதால், அங்கு சென்று வழிபடுபவர்களுக்கு கற்பக விருட்சமாக வாழ்க்கை மலர்கிறது. கனவுகள் அனைத்தும் நனவாகின்றது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியன்று (31/08/22) அன்று அவரை வழிபட்டால் தேவைகள் பூர்த்தியாகும்.
செல்வ வளம் பெருகும்:
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, அருகம்புல் வைத்து வழிபடுவது ஏன்?
நாம் பல தெய்வங்களுக்கு பல்வேறு நறுமணம் வீசும் மாலைகளால் மாலை சூட்டி வழிபடுகின்றோம். ஆனால் விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தது.
விநாயகர் பூஜை செய்வதற்கு அன்னம், மோதகம், அவல், பழங்கள் இல்லாது போனாலும் அருகம்புல்லும், தண்ணீரும் இருந்தால் போதும் என்பார்கள்.
பூத கணங்களின் அதிபதியாக திகழ்பவர்தான் விநாயகர். முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்தவொரு செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கின்றோம்.
விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள்புரிவார். அதனால்தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
அருகம்புல் கொண்டு அவரை தரிசிப்பது ஏன் என்று தெரியுமா?
அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் கோபத்தில் விழுங்கிவிட்டார். அப்போது வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அங்கு வெப்பமடையச் செய்தான்.
விநாயகரால் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது.
அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகிவிட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார். இதன் காரணமாகவே விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கியத்துவம் பெறுகின்றது.
பலன்கள் :
அருகம்புல் அர்ச்சனையால் ஞானம், கல்வி, செல்வம் அனைத்தும் கிட்டும்.
சுக்ல பட்ச சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்?
விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது, ‘மோதகம்” மற்றும் கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில் ஒரு உண்மை உள்ளது.
மோதும் அகங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தி தான் மோதகத்தைப் படைக்கின்றோம்.
மேல் தோலாக இருக்கும் மாவு பொருள், அண்டம்;. அதன் உள்ளே இருக்கும் பூரணம், பிரம்மம். நமக்குள் இருக்கும் பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது, மாயை. இந்த மாயை-யை அகற்றிவிட்டால், பூர்ணத்துவமான நல்ல பண்புகள் வெளியாகும். இதுவே, கொழுக்கட்டை உணர்த்தும் தத்துவம்.
கொழுக்கட்டையின் கூர்மையான முன்பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை மற்றும் அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு கணபதியின் அருளைப் பெறுவோம்…!
எல்லாம் வல்ல விநாயக பெருமானின் அருள் உங்கள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்.